இன்றைய இளையர்களின் காதலைப் பேசும் படம்: செல்வராகவன்

இன்றைய இளையர்களின் காதலைப் பேசும் படம்: செல்வராகவன்

3 mins read
7984e0d1-d530-4b22-b925-2558641925e6
’மென்டல் மனதில்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: சினிமா விகடன்
multi-img1 of 2

‘மென்டல் மனதில்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் செல்வராகவன். இதில் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார்.

‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’ ஆகிய படங்களின் வரிசையில் இடம்பெற உள்ளது ‘மென்டல் மனதில்’.

“முன்பு திரைத்துறைக்கு வந்த புதிதில் காதல், மூர்க்கம், வேகம் என்று கதை சொன்ன செல்வராகவனைத்தான் அனைவருக்கும் தெரியும். பிறகு பக்குவமடைந்து விட்டேன்.

தாகம் குறைந்துவிடாத தேடல் மூலம் இதுவரை கற்றுக்கொண்டது, பார்த்து, அனுபவித்து பக்குவப்பட்ட காதல் என்று பல அனுபவங்களைக் கடந்து வந்திருக்கிறேன்,” என்று விகடன் ஊடகப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் செல்வராகவன்.

இம்முறை தனது புதுப் படத்தில் இன்றைய இளையர்களின் காதலைச் சொல்லப் போகிறாராம். இப்படத்தின் கதையைச் சுருக்கமாக தன் நேர்காணலில் விவரித்துள்ளார்.

“ஓர் இளம் பெண்ணும் ஆணும் சந்திக்கிறார்கள். இருவரும் எதிரெதிர் துருவங்கள். இருவருக்கும் இடையே ஓர் உறவு மலர்ந்தால் அதை வாழ்வின் இறுதிவரைக் கொண்டு செல்வது மிகவும் கடினம். அந்த உறவை கிட்டத்தட்ட ஒரு ‘டைம் பாம்’ என்று குறிப்பிடலாம். இந்தக் கோலத்தில் யோசித்தபோது உருவானதுதான் ‘மென்டல் காதல்’.

“இந்த இளையர்களின் வாழ்க்கையை ஆழ்ந்து கவனிக்கத் தோன்றியது. அந்த எண்ணத்தைச் செயல்படுத்தி உள்ளேன். ரசிகர்களின் கருத்துகளுக்காகக் காத்திருக்கிறேன்,” என்று கூறியுள்ளார் செல்வராகவன்.

“உண்மையான காதல் என்பது இப்போது இல்லாமல் போய்விட்டதோ என்ற சந்தேகம் தனக்கு நீண்ட நாள்களாக இருப்பதாகச் சொல்பவர், ஒரு பெண்ணின் கண்ணைப் பார்த்து உள்வாங்கி சிலிர்த்ததும், மனத்துக்கள் பட்டாம்பூச்சிப் பறந்ததும் இப்போது அறவே இல்லை,” என்றும் புலம்புவதாக செல்வா கூறியுள்ளார்.

“அன்று இருந்த காதலில் அழகு அதிகம். அந்த அழகை இப்போது பார்க்க முடிவதில்லை. அது ஒரு விலைமதிப்பற்ற உணர்வு. இன்றைய இளம்தலைமுறையின் உலகத்துக்குள் நுழைந்து பார்ப்பது ஒரு ஆச்சரியமான அனுபவம். கவிதை எழுதும்போது ஒன்றும் புரியவில்லை. படமாகக் காட்சிப்படுத்தும் போதுதான் எவ்வளவு சிரமமானது எனப் புரிந்தது.

“ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து, லயித்துப் படமாக்கியுள்ளேன்,” என்று குறிப்பிட்டுள்ள செல்வராகவன், தனது கதாநாயகன் முன்பு பார்த்த ஜிவி பிரகாஷ் அல்ல என்கிறார்.

இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்துக்கான அடித்தளம் என்ன என்பதை நன்கு புரிந்துகொண்டு நடித்திருப்பதாகப் பாராட்டுகிறார். ஜிவி பிரகாஷுக்கு எனத் தனி பாணி இருப்பதாகக் கூறியுள்ள செல்வா, அவரது நடிப்பு மிகுந்த மனநிறைவைத் தந்ததாகச் சொல்கிறார்.

“நடிப்பில் நன்கு பக்குவம் அடைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். எனது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் அவரை இசையமைப்பாளராக கவனித்திருக்கிறேன். அவரிடம் புது இசையை உணர்ந்திருக்கிறேன். நான் எதிர்பார்ப்பதைத் தர அவர் சலித்துக்கொண்டதே இல்லை.

“அவரது திறமைக்கு அங்கீகாரமாக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றிருந்தாலும் எதையும் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் நடிப்பு, இசை என்று நேரம் ஒதுக்கி கச்சிதமாகப் பணியாற்றும் அவரைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

“தகுதியானவர்களுக்கு உரிய கௌரவம் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும் என்று பலர் சொல்வது உண்மைதான் என்பதும் அவரைப் பார்த்தால் புரிகிறது,” என்று ஜிவி பிரகாஷைத் தனது பேட்டியில் பாராட்டித்தள்ளியுள்ளார் செல்வராகவன்.

‘மென்டல் மனதில்’ படத்தில் மாதுரி கதாநாயகியாக நடித்துள்ளார். நிறைய புதுமுகங்களைப் பரிசீலித்தபோதும் யாரும் அக்கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இல்லையாம்.

“ஆனால் எனது கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் மாதுரி மிகப் பொருத்தமாக இருந்தார். வேறு யாராவது நடித்திருந்தால் இந்த அளவுக்கு நன்றாக செய்திருப்பார்களா என்று தெரியவில்லை.

“நான் மிகைப்படுத்திக் கூறுவதாக இப்போது நினைக்கலாம். ஆனால் இது எவ்வளவு உண்மை என்பது படம் பார்க்கும்போது எல்லாருக்கும் புரியும்,” என்று தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் செல்வராகவன்.

குறிப்புச் சொற்கள்