அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகாகி உள்ளார் அனிகா சுரேந்திரன்.
இந்நிலையில், தமிழில் நடிகர் தனுஷ் கொடுத்திருக்கும் பெரிய வாய்ப்புக்காக அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் என அவர் கூறியுள்ளார்.
நடிப்பு, இயக்கம் என இரட்டைக் குதிரை சவாரியில் கைதேர்ந்தவராகிவிட்டார் தனுஷ்.
‘ராயன்’ படத்துக்குப் பிறகு அவரது இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’.
இந்தப் படத்தின் மூலம், தனுஷின் மூத்த சகோதரியின் மகன் பவிஷ் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார்.
அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்க, மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன், சரண்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளனர்.
தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தனுஷ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அனிகா, தனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த தனுஷுக்கு நன்றி தெரிவித்தார்.
“இன்னும்கூட என்னால் நடப்பதை எல்லாம் நம்பவே முடியவில்லை. இந்தப் படத்தின் மூலம் கற்றுக்கொண்ட விஷயங்களை வாழ்நாளில் மறக்க முடியாது.
“இந்தப் படத்தில் ஜாலியாகப் பயணிக்க என்னுடன் பணியாற்றியவர்கள்தான் காரணம். இதற்காக, ஒட்டுமொத்த படக்குழுவிற்கு நன்றி. முக்கியமாக என் அம்மாவுக்கும் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன்.
“இத்தனை ஆண்டுகளாக எனக்கு இவ்வளவு ஆதரவாக இருந்து வரும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்,” என்றார் அனிகா.
அடுத்து பேசிய அறிமுக நாயகன் பவிஷ், தனக்கு மாமா முறையான தனுஷ் தனக்காக செய்துள்ள உதவிகளுக்கு வெறுமனே நன்றி தெரிவித்தால் மட்டும் போதாது என்றார்.
“ஒருநாள் திடீரென்று ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் நீ முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறாய் என்று என்னுடைய அண்ணன் ஸ்ரேயாஸ் சொன்னபோது இன்ப அதிர்ச்சி அடைந்தேன். வாழ்த்து கூறியவர்களிடம் பதிலுக்கு என்ன சொல்வது என்றுகூட தெரியவில்லை.
“இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பைப் பார்த்தபோது, திரையில் தெரிவது நான்தானா என அதிர்ச்சியானேன். அந்த அளவுக்கு என்னை முற்றிலும் வேறு மாதிரியாகக் காட்சிப்படுத்தி இருந்தனர்.
“என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு நபராக இருக்கக்கூடிய தனுஷுக்கு மிக்க நன்றி. அவர் எனக்கு செய்துள்ள அனைத்துக்கும் நன்றி சொன்னால் மட்டும் போதாது. அதேபோல அவரைப் படுத்தின பாட்டுக்கெல்லாம், நான் மன்னிப்பு கேட்டால் மட்டும் பத்தாது. எதை நம்பி எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்தீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதற்காக கடினமாக உழைப்பேன்,” என்றார் பவிஷ்.
இதையடுத்து பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, தமிழ் திரையுலகுக்கு நிறைய புது நடிகைகள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
“தனுஷ் நடிப்புப் பட்டாளத்தையே தயார் செய்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பில் ‘ஜாலியா வாங்க ஜாலியா போங்க’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் படமும் அப்படித்தான் இருக்கும்,” என்றார் எஸ்.ஜே.சூர்யா.
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் விரைவில் திரைகாண உள்ளதாகப் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இது உருவாகி உள்ளதாம்.