காதலும் திகிலும் கலந்த கதை ‘சட்டென்று மாறுது வானிலை’

காதலும் திகிலும் கலந்த கதை ‘சட்டென்று மாறுது வானிலை’

படம்: விகடன்

01 May 2026 - 2:49 pm

2 mins read

‘சர்கார்’, ‘தர்பார்’ ஆகிய திரைப்படங்களில் ஏ.ஆர். முருகதாசிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் பாபு விஜய். இவர் தற்போது ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் மூலம் இயக்குநர், தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

படத்தின் தலைப்பே வித்தியாசமாக உள்ளதே என்று கேட்பவர்களுக்கு அண்மைய ஊடகப் பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார் பாபு விஜய்.

மழை, வெயில், குளிர் என வானிலை மாறிக்கொண்டே இருப்பதுபோல், படத்தின் கதாநாயகனின் வாழ்க்கையிலும் அடுத்தடுத்த கணம் மாறிக்கொண்டே இருக்குமாம். அதனால் இப்படியொரு தலைப்பு என்பதுதான் அவர் அளித்துள்ள விளக்கம்.

‘அலைபாயுதே’ படத்தின் பாணியில் காதலும், ‘திரிஷ்யம்’ பாணியில் திகிலும் கலந்ததாக இப்படம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

“கூடுதலாக கொஞ்சம் நகைச்சுவையையும் சேர்த்திருக்கிறேன். எனது குருநாதர் முருகதாசின் படங்களில் சமூக விழிப்புணர்வு குறித்து நிச்சயம் பேசப்படும். என்னுடைய படத்திலும் அதுபோன்ற அம்சம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

“ஜெய் இதில் தகவல் தொழில்நுட்ப வல்லுநராக நடித்துள்ளார், நாயகி மீனாட்சிக்கு அமைச்சர் மகள் கதாபாத்திரம். மொத்தம் 36 இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.

“இந்தக் கதைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என யாரும் கூறிவிட இயலாது. யாரேனும் நம்மைப் பின்தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

“இதுபோன்ற சூழலில் நம் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி பாதுகாக்கிறோம். அதுதான் படத்தின் முக்கியமான அம்சம்.

“முதல் படம் என்கிற ஓர் உணர்வே இல்லாமல்தான் இதை இயக்கி முடித்தேன். படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன், படத்தொகுப்பாளர் டார்லிங் ரிச்சர்ட்சன், கலை இயக்குநர் கண்ணன் ஆகியோர் பக்கபலமாக இருந்தார்கள்.

“விஜய் ஆண்டனியின் இசைக்கச்சேரி ஒன்றுக்குச் சென்றிருந்தேன். மேடையில் முதல் வரிசையில் அவர் நடனமாடிக் கொண்டிருந்தார். இந்தக் கதைக்கு அவர் சரியாகப் பொருந்துவார் என அப்போதே எனக்குத் தோன்றியது.

“முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருப்பது குறித்துப் பலரும் கேட்கிறார்கள். திரைத்துறைக்கு வரும் முன் பத்து ஆண்டுகள் வேறு தொழில் செய்திருக்கிறேன். அதன் பிறகும்கூட பல வகையான தொழில்களைச் செய்திருக்கிறேன். அப்போது கிடைத்த அனுபவங்கள்தான் சினிமா தயாரிக்க கைகொடுத்துள்ளன. இவ்வாறு ஒரு தயாரிப்பாளராக களமிறங்க குறிப்பிட்ட சிலர் நல்லாதரவு அளித்து நம்பிக்கையைத் தந்தார்கள்,” என்று கூறியுள்ளார் பாபு விஜய்.

குறிப்புச் சொற்கள்
திரைப்படம்இயக்குநர்நடிகர்விழிப்புணர்வு