தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இது ‘டிராகன்’ கதை

4 mins read
0b8e31aa-c482-431b-9c46-72ac79648eaf
‘டிராகன்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘டிராகன்’ திரைப்படம். இதில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

படம் வெளியாக உள்ள நிலையில் அஸ்வத் மாரிமுத்து அண்மையில் அளித்துள்ள பேட்டியில் பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

யார் இந்த டிராகன் என்று கேட்டால், அஸ்வத்திடம் இருந்து விரிவான விளக்கம் கிடைக்கிறது.

“நம்மில் பலர் கல்லூரி வாழ்க்கையைக் கடந்து வந்திருப்போம். எல்லா கல்லூரியிலுமே மூத்த மாணவர்கள் (சீனியர் ஸ்டூடண்ட்) என்று சிலர் தனி வட்டம் அமைத்திருப்பார்கள். அவர்களில் ஒருவர் மிக முக்கியமானவராக இருப்பார். மொத்த கல்லூரியும் அவரைக் கொண்டாடும்.

“கல்லூரியில் அவர் வைத்ததுதான் சட்டமாக இருக்கும். திரும்பிய பக்கமெல்லாம் அவரைப் பற்றிய பேச்சாகத்தான் இருக்கும். அந்த மாணவருடன் நட்பாகப் பழக ஒரு வாய்ப்பு கிடைக்காதா என அனைவரும் ஏங்குவர்.

“ஆனால், இப்படிப்பட்ட கொண்டாட்டங்களுக்கு எல்லாம் அந்த மாணவனின் நல்ல பண்புகள் காரணமாக அமையாமல் அவன் செய்யக்கூடிய அசட்டு, அராத்துத்தனமான செயல்பாடுகளுக்காக இருக்கும்.

“சரியாகப் படிக்காமல், பொறுப்பில்லாமல் சுற்றித்திரிவான். அப்படிப்பட்ட ஒரு மாணவன்தான் ‘டிராகன்’. அவன்தான் என் படத்தின் நாயகன்.

“டிராகனுக்கு 48 அரியர்ஸ் இருக்கும். கல்லூரியில் அவன்தான் ‘கெத்து’. அவன் பண்ணாத அட்டகாசங்களே இருக்காது. ஆனால், இப்படிப்பட்ட மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியே சென்றால் சீந்துவதற்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

“கல்லூரியில்தான் ‘ஹீரோ’, வெளியில் ‘ஜீரோ’ என்பதுதான் அவர்களின் நிலைமை. ‘டிராகன்’ நன்கு படிக்கக்கூடிய மாணவன். 12ஆம் வகுப்பு வரை நல்ல மதிப்பெண்கள் எடுத்து நல்ல பெயர் வாங்கிய அவன் ஏன் கல்லூரியில் மோசமான மாணவனாக மாறுகிறான் என்பதற்கான காரணம் படத்தில் விளக்கப்பட்டு இருக்கும்,” என்கிறார் அஸ்வத் மாரிமுத்து.

‘டிராகனின்’ வாழ்க்கை தடம் மாற ஓர் இளம் பெண்தான் முக்கியக் காரணமாக இருப்பாராம். நன்றாகப் படிக்கும் மாணவர்களைத்தான் அழகான பெண்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கும் டிராகன், அந்த இளம் மாணவிக்காகத் தன்னை மாற்றிக் கொள்கிறான்.

அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதே அவனது ஒரே குறிக்கோளாக மாறிப்போகிறது. கல்லூரி வாழ்க்கையிலிருந்து வெளியே வரும்போதுதான் வாழ்க்கையின் நிதர்சனம் அவனுக்கு புரிகிறது.

அதன் பின்னர் எதார்த்த நிலையை ஏற்றுக் கொண்டு அவன் எவ்வாறு வாழ்க்கையில் முன்னேறுகிறான் என்பதுதான் இப்படத்தின் கதை.

“வாழ்க்கையில் எந்த உயரத்தை எட்டிப் பிடிக்கிறோம் என்பதைப் பொறுத்து வெற்றி தோல்விகள் அமைவதில்லை. ஒருவர் நேர்வழியில் செயல்பட்டு குடும்பத்தை நன்றாக கவனிக்கும்போதுதான் அவன் உண்மையாகவே வெற்றி பெற்றவனாகிறான்.

“குறுக்குவழியில் முன்னேறியவன் மீண்டும் நடுத்தெருவுக்கு வருவான் என்பதையும் இந்தப்படம் அலசும்,” என்று சொல்லும் அஸ்வத் மாரிமுத்து இதற்கு முன்பு ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கியவர்.

கல்லூரியில் படித்த போது பிரதீப் இவருக்கு இளைய மாணவராம். இருவரும் அப்போதே நட்பு பாராட்டியதுடன் திரைத்துறையில் இணைந்து செயல்பட வேண்டுமென முடிவு செய்தனராம்.

பிரதீப்பை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது அஸ்வத்தின் ஆசையாக இருந்துள்ளது. ஆனால் அவரோ திரைத்துறையில் ஒன்றிரண்டு வெற்றிகளைப் பெற்ற பிறகு இணைந்து செயல்படலாம் என தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

“பிரதீப் சிறந்த நடிகர். தாம் நடிக்கபோவதை முதலில் என்னிடம்தான் தெரிவித்தார். நானும் அவரை ஒரு நல்ல நடிகனாகத்தான் பார்த்தேன். இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமென சத்தியம் செய்து இருந்தோம். அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

“தனது ‘லவ் டுடே’ படத்தின் வெற்றியின் மூலம் திறைமை இருந்தால் யார் வேண்டுமானாலும் நாயகனாகலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா அவருக்கான இடத்தை அமைத்து கொடுத்திருக்கிறது,” என்கிறார் அஸ்வத்.

இப்படத்தின் நாயகியாக அனுபமா பரமேஸ்வரனை தேர்ந்தெடுக்க அவரது நடிப்பு மட்டுமல்லாமல், சிகை அலங்காரமும் முக்கியமாம்.

“சிலரை விளையாட்டாக ‘நூடுல்ஸ் மண்டை’ என்று குறிப்பிடுவோம். இவ்வாறு சுருள் முடியுடன் இருப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

“கதாநாயகியின் கண்கள் அழகாக இருக்க வேண்டும். உடல்வாகு, நிறம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் இயக்குநர்களின் விருப்பம் மாறுபடும். அந்த வகையில் சுருள் முடியுடன் இருந்த அனுபமா எனது கதைக்குப் பொருத்தமாக இருந்தார். நடிப்பில் நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகச் செய்து அசத்திவிட்டார்.

குறிப்பாக, காதல் முறிவு தொடர்பான காட்சியில் அவரது பிரமாதமான நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்.

“மலையாள நடிகையான அவர் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டு தாமே வசனங்களை பேசி நடிக்கிறார். திரையில் ஒலிக்கப்போவதும் அவரது குரல்தான்.

தமிழ் வார்த்தைகளை எந்த வித பிழையும் இன்றி உச்சரிக்கிறார். இவர் தெலுங்கிலும் நடிக்கிறார் என்பது பாராட்ட வேண்டிய ஒன்று,” என்று தமது பட நாயகியையும் அஸ்வத் மாரிமுத்து பாராட்டத் தவறவில்லை.

இந்த படத்தில் இயக்குநர்கள் கௌதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், மிஷ்கின் ஆகியோரும், அசாம் நடிகை கயட் லோகர் ஆகியோரும் முக்கியமான கதாபத்திரங்களில் நடித்துள்ளனர்.

நாயகன் பிரதீப்புக்காக நடிகர் சிம்பு ‘ஏண்டி விட்டுபோன’ என்ற பாடலை பாடியுள்ளார். லியோன் ஜோன்ஸ் இசையில் உருவாகியுள்ள ஆறு பாடல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்