ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் ‘ஹேப்பி ராஜ்’. அண்மையில் இப்படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டி வெளியானது. மரியா இளஞ்செழியன் இப்படத்தை இயக்குகிறார்.
இவர் லோகேஷ் கனகராஜ், பிரதீப் ரங்கநாதன் ஆகியோருடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இப்படத்தின் கதை என்ன?
“இளையர்களையும் குடும்பங்களையும் கவர வேண்டும் என்பதுதான் என்னுடைய அடிப்படைத்திட்டம்.
“இப்போதெல்லாம் மகிழ்ச்சி தரக்கூடிய குடும்பப் படங்கள் அதிகம் வருவதில்லை. இளையர்களின் மனப்பான்மையில் இருந்து ஒரு குடும்பக்கதையைச் சொல்வதற்கான முயற்சிதான் ‘ஹேப்பிராஜ்’.
“25 வயது வரை தாம் எதிர்கொள்ளும் ஜாலியான பிரச்சினைகள், காதலுக்குள்ளே ஒரு பயணம், கிராமம், நகரம் என சுற்றிச் சுற்றி வரும் திரைக்கதை, இரண்டு குடும்பங்களுக்குள் நடக்கும் வேடிக்கைகள் ஆகியவற்றை இந்தப் படத்தில் அழகாக பதிவு செய்திருக்கிறோம்,” என்கிறார் இயக்குநர் மரியா இளஞ்செழியன்.
‘ஹேப்பி ராஜ்’ கதாபாத்திரங்களுடன் நாயகன் ஜிவி பிரகாஷ் கச்சிதமாகப் பொருந்தியுள்ளாராம். இன்றைய இளையர்களை இரண்டு மணிநேரம் திரையரங்கில் உட்கார வைத்து கதை சொல்வது எளிதல்ல என்றும் அதை இயக்குநர் தனது திறமையால் சாதித்துக்காட்டி இருப்பதாகவும் பாராட்டுகிறார் ஜிவி பிரகாஷ்.
முன்பு ஜாலியான, குதூகலமான இளம் நாயகனாக வலம் வந்த ஜிவி பிரகாஷிடம் அண்மைக்காலமாக இந்த உணர்வுகளைப் பார்க்க முடியவில்லை என்று சொல்லும் மரியா இளஞ்செழியன், இன்று பிரதீப் ரங்கநாதன் திரையில் வெளிப்படுத்தும் அம்சங்களை ஜிவி எப்போதோ வெளிப்படுத்திவிட்டதாகப் பாராட்டுகிறார்.
“நான் பிரதீப் ரங்கநாதனிடம் பணியாற்றியவன். எனவே, என்னுடைய இந்தக் கணிப்பு நூறு விழுக்காடு கச்சிதமாக இருக்கும் என உறுதியாக நம்பலாம். ‘ஹேப்பிராஜ்’ கதாபாத்திரத்துக்கு ஜிவிதான் மிகப் பொருத்தமானவர். அவருக்கு நகைச்சுவை மிக எளிதாக வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
“நான் கதையில் எழுதியதை விட, நடித்துக் காட்டியதைவிட சொன்னதையும் எதிர்பார்த்தையும்விட ஜிவி பிரகாஷ் பிரமாதமாகப் பங்களித்துள்ளார்,” என்கிறார் மரியா இளஞ்செழியன்.
இப்படத்தின் நாயகி ஸ்ரீகௌரி பிரியா. ‘லவ்வர்’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். கடந்த சில மாதங்களாகத் தேடி வந்த எந்த வாய்ப்பையும் ஏற்கவே இல்லையாம். ஆனால் ‘ஹேப்பி ராஜ்’ கதையைக் கேட்ட உடனேயே நடிக்கச் சம்மதித்துவிட்டாராம்.
“ஜிவி பிரகாஷ், ஸ்ரீகௌரி பிரியா ஆகிய இருவரின் அளப்பறையான நடிப்பு ரசிகர்களை நிச்சயம் கவரும். நான் எதிர்பார்த்த நடிப்பை வழங்கி பல இடங்களில் சிலிர்க்க வைத்துவிட்டார் ஜிவி.
“இந்தப் படத்தில் இன்னொரு சுவாரசியமும் உள்ளது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் அப்பாஸ் தமிழில் நடிக்கிறார். நியூசிலாந்தில் குடியேறிவிட்ட அவரை எப்படியோ தொடர்புகொண்டு இந்தப்படத்தில் நடிக்க வைத்துள்ளோம். காணொளி மூலமாக கதையைக் கேட்டு மகிழ்ச்சியுடன் நடிக்க முன்வந்தார்,” என்கிறார் மரியா.
ஜார்ஜ் மரியான், கீதா கைலாசம், ‘லவ் டுடே’ பிரார்த்தனா, மதுரை முத்து மற்றும் பலர் இப்படத்தில் உள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் காதல் காட்சிகள் மிக அருமையாகவும் இயல்பாகவும் இருக்குமாம்.
“இருவருக்கும் இடையேயான உடல் மொழி மிக அபாரமாக இருந்தது. காட்சிகள் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பான என் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஜிவியும் பிரியாவும் நடித்திருப்பதை அற்புதம் என்று மட்டுமே குறிப்பிட முடியும்,” என்கிறார் மரியா இளஞ்செழியன்.

