ஒரு கதையை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்த்துவதில் படத்தொகுப்பின் (எடிட்டிங்) பங்கு முக்கியமானது. படத்தொகுப்பு பணி நடக்கும் மேசையில்தான் ஒரு படமே உருவாகிறது என்பார்கள்.
‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’ உள்ளிட்ட பல படங்களில் படத்தொகுப்பாளராக இருந்த லியோ ஜான்பால், தற்போது ‘ககன மார்கன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி.
“படத்தின் தலைப்பைக் கேட்கும் அனைவருமே ஏதோ மர்ம கதையின் தலைப்புபோல் உள்ளதே எனக் கேட்கிறார்களாம். கொரோனா முடக்க நிலையின்போது நானும் எனது நண்பர் விஷ்ணுவும் இணைந்து இந்தக் கதையை எழுதினோம். திரைக்கதை தயாரான பிறகு, தயாரிப்பாளரைத் தேட ஆரம்பித்தேன்,” என்கிறார் லியோ.
‘ககன மார்கன்’ என்றால் காற்றின் வழி பயணிப்பவன் என்று சித்தர்களின் அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
கொலை, மர்மம், குற்றச்செயல் உள்ள திகில் கதையாக இதை உருவாக்கி உள்ளனர். அனல் காற்று போல் குணம் கொண்ட கதாநாயகன், ஒரு மார்க்கமான கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது கதைச்சுருக்கம்.
“இது ஆசியாவின் ஆகச்சிறந்த அறிவியல் ரீதியிலான கற்பனைப் படமாக இருக்கும்,” என்று சொல்லும் லியோ, ஆசியாவுக்கான மருத்துவம், விஞ்ஞானம் ஆகியன தனித்தனியாக உள்ளன என்றும் இந்தக் கோணத்தில்தான் கதை நகரும் என்றும் சொல்கிறார்.
மூத்த காவல்துறை அதிகாரியான விஜய் ஆண்டனிக்கும், அவரால் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ஒருவருக்கும் இடையே நடக்கும் புலனாய்வு மிகவும் சுவாரசியமாக சித்திரிக்கப்பட்டுள்ளது என்கிறார் லியோ ஜான்பால்.
விஜய் ஆண்டனி மும்பையில் இருந்து சென்னைக்கு வருவாராம். அவர் எதற்காக சென்னை வருகிறார் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது தான் படம் முழுவதும் சம்பவக் கோர்வைகளாக இடம்பெறுமாம்.
இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக மிடுக்கு காட்டியுள்ளார் விஜய் ஆண்டனி. மேலும் முகத்தில் இருந்து கை விரல்கள் வரை தீக்காயங்களுடன் கூடிய தோற்றத்தில்தான் படம் முழுவதும் வலம் வருவாராம்.
சமுத்திரக்கனி, ‘மகாநதி’ சங்கர், தீஷிகா, அர்ச்சனா, கனிமொழி என மேலும் பலர் நடித்துள்ளனர்.
“படத்தொகுப்பின்போது இசைக்கான இடைவெளியையும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் சிறந்த ‘கதைசொல்லி’யாக இருக்க முடியும்.
“என்னுடைய இந்த பாணி காரணமாக விஜய் ஆண்டனியின் நட்பு கிடைத்தது. அவரது படங்களில் ‘டீசர்’, ‘டிரெய்லர்’ ஆகிய முன்னோட்டக்காட்சிகளை உருவாக்க என்னை அழைத்து வேலை கொடுப்பார்.
“நானும் அவர் விரும்புவதுபோல் அவற்றில் உள்ள காட்சிகளை வெட்டிப்பிரித்துக் கொடுத்திருக்கிறேன்.
“ஒருமுறை பணி நிமித்தம் என்னை அழைத்தபோது, நானே ஒரு படத்தை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினேன். அவருக்கு மிகுந்த ஆச்சர்யம். ‘உங்கள் கதையை நானே கேட்கிறேன்’ என்று சொன்னதுடன் நிற்காமல், உடனே நேரில் அழைத்து கதை கேட்டார்.
“அது பிடித்துப்.போனதால் தானே தயாரித்து, இசையமைக்கவும் முன்வந்தார் என்று ‘ககன மார்கன்’ உருவான கதையை விவரிக்கிறார் லியோ ஜான்பால்.
இப்படம் திட்டமிட்டபடியே திரைகாணும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.