தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியாயத்தைத் தேடிச்செல்லும் நாயகனின் கதை - ‘கருப்பு பெட்டி’

2 mins read
4ca3ac07-a562-4ea1-a9e6-20944db84139
 ‘கருப்பு பெட்டி’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் பிரபாத், தேவிகா வேணு. - படம்: ஊடகம்

விமானத்தில் கருப்பு பெட்டிதான் மிக முக்கியமானது. ஒரு வேளை விமானம் விபத்தை சந்தித்தால் கடைசி தருணங்களில் என்ன நடந்தது என்பதைக் கறுப்பு பெட்டி மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும்.

கருப்பு பெட்டி போன்று மிக முக்கியமான விஷயத்தை சிலர் தேடுவதுதான் இந்தப் படத்தின் கதை. அதனால்தான் ‘கருப்பு பெட்டி’ என்பதைத் தலைப்பாக வைத்துள்ளதாகச் சொல்கிறார் அறிமுக இயக்குநர் எஸ்.தாஸ்.

இப்படத்தை பிரபாத் தயாரித்துள்ளார். படத்தின் கதாநாயகனும் அவர்தான்.

தேவிகா வேணு நாயகியாக நடிக்க, அருண் இசையமைத்துள்ளார். கதைப்படி, நாயகன் மிகவும் நேர்மையான இளையராக இருப்பாராம். “அலுவலகத்துக்கு ஒரு நாள்கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றக்கூடிய பொறுப்பான மனிதரும்கூட. ஆனால், இப்படிப்பட்ட நல்லவர் மீது பெண்களிடம் தவறாக நடந்துகொள்பவன் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது.

“ஏன் இந்த நிலைமை ஏற்படுகிறது, நாயகனைச் சுற்றி உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பதுதான் கதையின் மையக்கரு. காரணங்களையும் நியாயத்தையும் தேடிச்செல்கிறான் நாயகன். அவனுக்கு சிலர் உதவுகின்றனர்,” என்கிறார் இயக்குநர் எஸ்.தாஸ்.

இது தனக்கு மட்டுமல்லாமல், மேலும் பலருக்கு வாழ்க்கை தரும் படைப்பாக அமையும் என்றும் கூறுகிறார். நாயகனைப் போலவே ஒட்டுமொத்த படக்குழுவும் நேர்மையாகச் செயல்பட்டும் உழைத்தும் இந்தப் படத்தை உருவாக்கி இருப்பதாகக் குறிப்பிடும் இயக்குநர், ரசிகர்களின் ஆதரவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

தயாரிப்பாளர், இசையமைப்பாளர் அருண், ஒளிப்பதிவாளர் மோசஸ் டேனியல் என அத்தனை பேரும் இந்தப் படத்தின் கதையை நம்பி களமிறங்கி இருக்கிறோம்.

மிக வலுவான கதைக்களத்துடன் கூடிய இந்தப் படைப்பை பார்த்த தணிக்கைக் குழுவினர் மனதாரப் பாராட்டியது உற்சாகம் அளித்தது.

“கடந்த 25 ஆண்டுகளாக நான் படம் இயக்க நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். எனது இத்தனை ஆண்டுகால காத்திருப்புக்கும் திறமைக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் தயாரிப்பாளர் பிரபாத் இந்த வாய்ப்பை அளித்துள்ளார்,” என்கிறார் அறிமுக இயக்குநர் எஸ்.தாஸ்.

குறிப்புச் சொற்கள்