அரசியல் கட்சித் தலைவராகிவிட்ட விஜய், தற்போது ‘ஜன நாயகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் வாக்குகள் என்பது எவ்வளவு முக்கியம் என்றும் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை முடித்த கையோடு விஜய் அரசியலில் தீவிரமாக இறங்க உள்ளதால், இப்படத்தில் புரட்சிகரமான வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘ஜன நாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு, நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்க எச்.வினோத் இயக்குகிறார்.
இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது.
கிட்டத்தட்ட ரூ.400 கோடி பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூலை மாதத்துக்குள் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, படத்தின் வியாபார நிலவரம் குறித்த சில தகவல்கள் தமிழக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை மட்டும் செவன் ஸ்க்ரின் ஸ்டூடியோ நிறுவனம் ரூ.100 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது.
வெளிநாட்டு விநியோக உரிமையை பார்ஸ் பிலிம் நிறுவனம் ரூ.78 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது.
இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் ஓ.டி.டி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியதாம். எனினும் முன்னணி ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் மிகப்பெரிய தொகைக்கு இந்த உரிமையை வாங்கியுள்ளதாம். இதற்காக ரூ.121 கோடி கைமாறியதாகக் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமை ரூ.120 கோடி என அண்மையில் தகவல் வெளியானது.
இந்நிலையில், அதைவிட ஒரு கோடி ரூபாய் அதிகமாக ‘ஜன நாயகன்’ படத்தின் ஓடிடி வியாபாரம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.