‘தேஜாவு’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அரவிந்த் சீனிவாசன், தமிழில் அடுத்து இயக்கியுள்ள படம் ‘தருணம்’.
இது முழுநீள காதல் படமாக உருவாகி உள்ளது. படத்தின் முன்னோட்டக் காணொளி தொடங்கி, பாடல் வரை ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தன. நாயகனாக கிஷன்தாஸ், நாயகியாக ஸ்மிருதி வெங்கட் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
இருவரில் கிஷன் ஏற்கெனவே தமிழில் ‘முதலும் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்துள்ளார். நாயகி ஸ்மிருதி வெங்கட் ‘தேஜாவு’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.
“கிஷன்தாஸ் என்று சொன்னால் அவர் பதின்ம வயது நாயகனாக நடித்ததுதான் நினைவுக்கு வரும். ‘முதலும் நீ முடிவும் நீ’ படத்தில் பள்ளிக்காலக் காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில்தான் அவர் அதிகம் நடித்திருந்தார். அப்படிப்பட்ட ஓர் இளமையான, புத்துணர்ச்சியுடன் கூடிய முகம்தான் ‘தருணம்’ படத்தின் கதைக்கும் தேவைப்பட்டது.
“திரையில் பார்க்கும் காதல் ஜோடியை இதுவரை வேறு எந்தப் படத்திலும், எந்த இடத்திலும் யாரும் பார்த்திருக்கக் கூடாது என்று நினைத்தேன். என் எண்ணத்துக்கு ஏற்ப நாயகியாக ஸ்மிருதி வெங்கட்டும் அமைந்தார்.
“என்னுடைய முந்தைய படைப்பான ‘தேஜாவு’ படத்தில் ஸ்மிருத்திக்கு சிறிது நேரமே வரக்கூடிய வேடத்தைத்தான் ஒதுக்க முடிந்தது. எனினும் அவர் அந்தக் கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருந்தார்.
“அவரது திறமையை தமிழ் சினிமா இன்னும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தோன்றியது. அதனால்தான் அவரை ஒப்பந்தம் செய்தேன்.
“இவர்களுடன் ராஜ் அய்யப்பா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மொத்த கதையையும் இவர்கள் மூவரும்தான் சுமக்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
“நடிகர் பால சரவணனுக்கு அண்மைக்காலமாக நல்ல கதைகள் அமைகின்றன. ‘தருணம்’ படத்தில் அவர் முன்பே ஒப்பந்தமாகிவிட்டார். மேலும் கீதா கைலாசம், விமல், ஸ்ரீஜா ரவி ஆகியோருக்கும் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன,” என்கிறார் அரவிந்த் சீனிவாசன்.
இப்படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். காதல் பாடல்கள் கொண்ட படம் என்பதால் இசையில் புகுந்து விளையாடி இருக்கிறாராம்.
‘எனை நீங்காதே நீ’ எனத் தொடங்கும் பாடலை சில வாரங்களுக்கு முன்பே ரசிகர்கள் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர். அஸ்வின் ஹேமந்த் பின்னணி இசை வழங்கியுள்ளார்.
“தற்போது வன்முறைக் காட்சிகள் உள்ள படங்கள்தான் அதிக எண்ணிக்கையில் வெளிவருகின்றன. அவற்றுக்கு இடையே மென்மையான ஒரு காதல் தருணத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் திரையரங்குக்கு நம்பிக்கையுடன் வரலாம்.
“இன்றைய தலைமுறைக்கு எந்தக் கருத்தையும் சொல்லாமல், அதேசமயம் ஒரு பக்குவமான காதல் கதையை விவரிக்கவும் படத்தை உருவாக்கி உள்ளோம்.
“எனது முதல் படத்துக்கு தேர்மாறாக இரண்டாவது படத்தை உருவாக்கினேன். அவை இரண்டுக்கும் சிறிதும் தொடர்பு இல்லாத வகையில் மூன்றாவது படமாக ‘தருணம்’ உருவாகியுள்ளது.
“ஓர் இயக்குநர் எந்தக் கதையாக இருந்தாலும், அது கச்சிதமாக இயக்கத் தயாராக இருக்க வேண்டும். ஒரு கதை சொல்லியாக ஏதேனும் ஒரு தருணத்தில், நம் மனதில் ஒரு கதைக்கரு உருவாகும். அதைக் கொண்டு திரைக்கதையை உருவாக்கி, படத்துக்கு வடிவம் கொடுக்க வேண்டும்.
“நம் வாழ்க்கையில் எல்லோருக்குமே ஏதேனும் ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் புரட்டிப்போடுவதாக அமைந்துவிடும். அதிலும் குறிப்பாக, காதல் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தருணத்தில் வரக்கூடியதுதான்.
“அப்படிப்பட்ட ஒரு தருணத்தை என் படத்தின் நாயகனும் நாயகியும் சந்திக்கிறார்கள். அத்தருணம் இருவரது வாழ்க்கையில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது, அதை அவர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை,” என்கிறார் இயக்குநர் அரவிந்த் சீனிவாசன்.