நடிகர் சூரி நடித்திருக்கும் மாமன் படத்தின் நேர்காணலில் மற்றவர்களின் கதை என்னைத் திருப்திப்படுத்தவில்லை. அதனால்தான் இந்தக் கதையை எழுதினேன் என்று கூறியுள்ளார்.
நடிகர் சூரி ‘விடுதலை’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ படங்களைத் தொடர்ந்து ‘விலங்கு’ இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ எனும் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
நடிகர் சூரியே கதை எழுதியுள்ள இந்தப் படத்திற்கு ‘லார்க் ஸ்டுடியோஸ்’ தயாரிக்கிறது. பிரபல இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடித்திருக்கிறார்.
இப்படம் மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் சூரி பேசியபோது, “‘கருடன்’, ‘விடுதலை’, ‘கொட்டுக்காளி’ படங்கள் எல்லாம் ஒவ்வொன்றும் வேறு மாதிரியானவை. இறுக்கமான படங்களாக இருந்ததால் மகிழ்ச்சியான குடும்பப் படம் ஒன்றில் நடிக்க விரும்பினேன்.
பலரும் பலவிதமாய் கதைகளைக் கூறினார்கள், ஆனால் எதுவும் எனக்கு பிடித்தமாதிரி அமையவில்லை.
இந்தப் படத்தின் இயக்குநரை எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தெரியும். இயக்குநர் பாண்டியராஜ் படங்களில் இருந்தே இவருடன் நல்ல பழக்கம். நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்வோம்.
தொடர்புடைய செய்திகள்
இவர் ஒரு கிராமத்து கதையைக் கூறினார். அது எனக்கு போதுமானதாக இல்லை. நான் ஒரு கதையைக் கூறினேன். அது அவருக்கும் பிடித்து இருந்தது. அந்தக் கதைதான் ‘மாமன்’ என்ற பெயரில் உருவாகி உள்ளது,” என்றார் சூரி.
தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதன் வெளியீட்டையொட்டி இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், “நானும் சூரியும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில்தான் அறிமுகமாகி பழக்கமானோம்.
படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் பூஜை போடுவதற்கு விமல், சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் என்று ஒரு சிலர்தான் சென்றோம்.
அப்போது நான் அழைக்காமலே விமலுடன் காரிலிருந்து இறங்கி வந்தார் சூரி.
அந்தப் படத்தில் அவரை நான் நடிக்கக் கூப்பிடவில்லை. அவராகவே வந்திருந்தார்.
அவரைப் பார்த்துவிட்டு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று அதன்பின்னர்தான் முடிவு செய்தேன்.
அதன் பிறகு அவருக்கு உடை கொடுத்து மாற்றி வரச்சொன்னேன். அவரும் ஏன்? எதற்கு? என்று கேட்காமல் கொடுத்த உடையை போட்டு வந்தார்.
சூரியின் அந்த தன்னம்பிக்கை, முயற்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது அவரையும் வைத்து சில புகைப்படங்களை எடுத்தேன்.
அந்த தன்னம்பிக்கை, முயற்சிதான் அவரை இந்த அளவிற்கு கொண்டு போகிறது,” என்றார்.
இதனையடுத்து, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ‘மண்டாடி’ என பெயரிடப்பட்டுள்ளது. மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்
அண்மையில் இப்படத்தின் சுவரொட்டிகள் வெளியானது. தெலுங்கிலும் இப்படம் இதே பெயரில் வெளியாக உள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சுஹாஸ் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் நாயகனாக நடிக்கும் சூரி தெலுங்கில் வில்லனாக நடிக்க இருக்கிறார்.