‘பதினாறு வயதினிலே’ நாயகி ‘மயிலு’ உருவான கதை

4 mins read
cfdc664f-a079-4e1d-bca8-b1435d6a832d
ஸ்ரீதேவி. - படம்: ஊடகம்
multi-img1 of 6

திரையுலகில் சாதனை படைத்த நட்சத்திரங்கள், படைப்பாளிகளின் முதல் படம், அதாவது ‘அறிமுகமான படம்’ என்பது பெரும்பாலும் எல்லாருக்கும் தெரியும்.

ஆனால், பெரும்பாலான கலைஞர்களின் ‘திரையுலக நுழைவு’ என்பது வேறு ஒரு திரைப்படமாக இருக்கும்.

அப்படிப்பட்ட அதிகம் அறியப்படாத விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்...

ராஜாவின் முதல் பாட்டு!

இசைஞானி இளையராஜாவின் முதல் படம் எது? என்ற கேள்வியை முடிக்கும் முன், ‘அன்னக்கிளி’ என பதில் வந்துவிடும். ஆனால் இளையராஜா முதலில் இசையமைக்க ஒப்பந்தமாகி, மெட்டுக்கள் அமைத்தது ஜெமினி கணேசன் படத்திற்குத்தான் என்பது பலருக்கும் தெரியாது.

ஜெமினியின் நுங்கம்பாக்கம் வீட்டில் வைத்து பாட்டுக்கான மெட்டுகளைப் போட்டு, ஜெமினியும் நன்றாக இருப்பதாக உறுதி செய்தார். பிறகு குடும்பச் சூழலால் அந்தப்படத்தைக் கைவிட்டார் ஜெமினி. அந்தப் படத்திற்கு ‘தீபம்’ எனத் தலைப்பு வைத்திருந்தனர்.

‘அன்னக்கிளி’க்குப் பிறகு இளையராஜாவின் இசைக்காலம் தொடங்கியது. பின்னாள்களில் ‘தீபம்’ என்ற பெயரில் சிவாஜி நடித்த படத்துக்கு இசையமைத்தார் இளையராஜா.

பாரதிராஜாவின் மயிலு!

பிரபல தயாரிப்பாளராக இருந்த கே.ஆர்.ஜி. தனது நிறுவனம் மூலம் பாரதிராஜாவின் முதல் படத்திற்குத் திட்டமிட்டு, எல்லாம் தயார். படத்தின் தலைப்பு ‘மயிலு’.

ஆனால், படத்திட்டம் தள்ளிப்போனது. இருப்பினும் தன்னை நம்பியிருந்த பாரதிராஜாவைக் கைவிடாமல், தனது நண்பரான எஸ்.ஏ.ராஜ்கண்ணுவை படத்தைத் தயாரிக்கச் சொல்லி, விநியோக ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார் கே.ஆர்.ஜி.

அந்தப் படம்தான் பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’. இதில் கதாநாயகி ஸ்ரீதேவியின் கதாபாத்திரத்துக்கு ‘மயிலு’ எனப் பெயர் வைத்தார் பாரதிராஜா.

கமல் சேட்டன்!

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய கமல்ஹாசன் விடலை வயதில், இளைஞர் பருவத்தை எட்டும் வயதிற்குள் ஏகப்பட்ட படங்களில் சிறப்புத் தோற்றங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும்கூட, அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ‘கன்னியாகுமரி’.

இது மலையாளப் படம். 1974 ஜூலையில் வெளியானது. இந்தப் படத்தை இயக்கிய கே.எஸ்.சேதுராமன், எம்ஜிஆரின் ‘நாளை நமதே’ படத்தை இயக்கியவர்.

‘கன்னியாகுமரி’ படத்துக்கு முன்பே ஜெயலலிதா, கமல் ஜோடியாக நடிக்க, ஒரு படத்தை இயக்கித் தயாரிக்க ஜெயலலிதாவிடம் சம்மதம் பெற்றார் இயக்குநர் வி.சி.குகநாதன். இவரின் ‘அன்புத் தங்கை’ படத்தில் ஜெயலலிதா, கமல் ஒரு நாடகப் பாடலுக்கு நடித்திருப்பர். இதில் கமல் புத்தராக வருவார். அடுத்த படத்துக்கு இவர்களை ஜோடியாக்க குகநாதன் நினைத்தார். அதனைக் கைக்கூடவில்லை.

‘மிலிட்டரி மேன்’ எம்ஜிஆர்

எம்ஜிஆர் தலைமைக் காவலராக சிறு வேடத்தில் தோன்றிய முதல் படம் ‘சதிலீலாவதி’.

தொடர்ந்து சிறுசிறு வேடங்களே கிடைத்ததால், சினிமாவே வேண்டாம் என உடம்பை நன்கு தேற்றி ராணுவத்தில் சேரவிருந்தார். இந்த நிலையில், ‘நாராயணன் ஐயங்கார்’ நிறுவனத்தில், சாயா எனும் படத்தை இயக்க ஒப்பந்தமான இயக்குநர் நந்தாலால், எம்ஜிஆரை நாயகனாகவும், தியாகராஜ பாகவதருடன் ‘அசோக் குமார்’ படத்தில் நடித்து புகழ்பெற்ற டிவி குமுதினியையும் ஒப்பந்தம் செய்தார்.

படப்பிடிப்பு கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் நடந்து வந்த நிலையில், பி.யூ.சின்னப்பாவை நாயகனாக நடிக்க வைக்க தயாரிப்புத் தரப்பு விரும்பியது.

‘நான் தேர்வு செய்த ராமச்சந்திரன் படத்தில் இல்லையென்றால் நானும் படத்தில் இருந்து விலகுவேன்’ என்றார்.

‘நம்மை மாற்றிவிடுவார்களோ...’ என்கிற குழப்பத்துடன் எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருந்தபோது, நந்தவனத்தில் தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் இளவரசி குமுதினியின் மடிமீது எம்ஜிஆர் விழுவது போல் ஒரு காட்சி.

அக்காட்சி பலமுறை எடுத்தும் சரியாக வரவில்லை.

மீண்டும் எடுக்கத் தயாரானபோது, “பிரபல நடிகையான என் மனைவியை ஒருவரது மடியில் பலமுறை விழவைத்து அசிங்கப்படுத்துகிறீர்களா?” என குமுதினியின் கணவர் சத்தம் போட, எம்ஜிஆருக்கு அவமானமாகிவிட்டது.

இதைக் காரணமாக வைத்து எம்ஜிஆரை தயாரிப்பாளர் படத்திலிருந்து வெளியேற்றிவிட, விஷயமறிந்து இயக்குநரும் விலகிக்கொண்டார். படம் கைவிடப்பட்டது.

அதன்பின், ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் எம்ஜிஆரும் வி.என்.ஜானகியும் நடித்தனர். பணப் பிரச்சினையால் படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.

எஸ்.ஏ.ஏ.சாமி இயக்குநராக அறிமுகமான ‘ராஜகுமாரி’யில் எம்ஜிஆரையும் கே.மாலதியையும் நடிக்க வைத்தார். ஆக, எம்ஜிஆர் கதாநாயகனாக முதலில் நடித்த படம் ‘சாயா’ வெளிவரவில்லை.

எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த ‘மருதநாட்டு இளவரசி’தான் எம்ஜிஆருக்கு முதல் படம் என்றாலும்கூட, ‘ராஜகுமாரி’ முந்திக்கொண்டு திரையரங்குக்கு வெளிவந்துவிட்டதால், எம்ஜிஆர் நாயகனாக நடித்த முதல் படம் ‘ராஜகுமாரி’ என்ற இடத்தைப் பிடித்துவிட்டது.

மீன் குஞ்சு சிவாஜி!

‘பராசக்தி’ படத்தில் (சிவாஜி) கணேசனை அறிமுகப்படுத்த ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியாரும் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாளும் முடிவு செய்தனர்.

ஆனால், ‘சிவாஜி வசனம் பேசும்போது மீன் குஞ்சு தண்ணீருக்குள் வாயைத் திறந்து திறந்து மூடுவது போலிருக்கு’ என ஏவிஎம் சவுண்ட் என்ஜினியர் சொல்ல, ‘பராசக்தி’ தயாரிப்பில் இருந்து விலகியது ஏவிஎம்.

அதன்பின் சிவாஜிக்கு சத்தான ஆகாரங்கள் கொடுத்து, தேற்றி பெருமாள் நடிக்க வைத்தார். படம் பாதி வளர்ந்த நிலையில், சிவாஜியின் நடிப்பைக் கேள்விப்பட்டு, ‘பரதேசி’ என தெலுங்கிலும், ‘பூங்கோதை’ என தமிழிலும் தான் தயாரித்த படத்திற்கு நடிகை அஞ்சலி தேவி அவரை ஒப்பந்தம் செய்தார்.

சிவாஜியின் முதல் படம் ‘பராசக்தி’ என்றாலும், முதலில் அவர் சம்பளம் பெற்ற படம் ‘பரதேசி’.

இரட்டைக் குதிரை!

‘பைரவி’ என்ற படத்தைத் தயாரிக்க ரஜினியைக் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார் கதாசிரியர் கலைஞானம். இயக்கம் ஆஸ்கர் மூவீஸ் பாஸ்கர்.

அதே நேரத்தில்தான் மகேந்திரன் இயக்கத்தில் ‘முள்ளும் மலரும்’ படத்திற்காக ரஜினியை நாயகனாக ஒப்பந்தம் செய்திருந்தார் தயாரிப்பாளர் வேணு செட்டியார்.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நாயகனாக நடிக்க ரஜினிக்கு வாய்ப்பு அமைந்தது. ஒன்றன்பின் ஒன்றாக வெளியானதும் ரஜினியை முதலில் நாயகனாக்கியது ‘பைரவி’ படம்.

தல கத!

தமிழ்த் திரையுலகின் நட்சத்திர நடிகர்கள் பட்டியலில் முதல் வரிசை நடிகராகத் திகழும் அஜித்குமார் ‘தல’ என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

தமிழில் அவர் நாயகனாக நடித்த முதல் படம் ‘அமராவதி’. ஆனாலும் திரையில் நாயகனாக அஜித் தோன்றிய முதல் படம், 1993 ஜூலை 16இல் வெளியான ‘பிரேம புஸ்தகம்’ படம்தான்.

குறிப்புச் சொற்கள்