கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ‘ரெட்ரோ’.
அப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவுடன் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடந்தாண்டு தொடக்கத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்து மே 1ஆம் தேதி அப்படம் திரைக்கு வரவுள்ளது.
அதற்கான விளம்பர வேலைகளில் அப்படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நாயகி பூஜா ஹெக்டே ஆகியோர் ஊடகங்களைச் சந்தித்து படம் குறித்து பேசி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு அப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடந்தது.
அப்போது ரெட்ரோ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
இந்நிலையில், அப்படம் சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக மட்டுமல்லாமல் காதல் படமாகவும் இருக்கும் என அப்படத்தின் இயக்குநர் தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதுவரை சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களை இயக்கி வந்த கார்த்திக் சுப்புராஜ் முதல் முறையாக காதல் படத்தை இயக்குகிறார்.
அதுவும் சூர்யாவை வைத்து காதல் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருப்பதால் அப்படத்தின்மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வம் கூடியுள்ளது.
இதற்கிடையே, ‘ரெட்ரோ’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் அப்படத்தின் கதைப் பற்றிக் கார்த்திக் சுப்புராஜ் பேசியிருந்தார்.
“அந்தப் படத்தின் கதை விஜய்க்காக எழுதப்பட்டது அல்ல. ரஜினியை மனதில் வைத்துதான் நெடுநாள்களுக்கு முன்பே அக்கதையை எழுதினேன். ரஜினிக்காக எழுதியபோது முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இருந்தது,” என அவர் கூறினார்.
மேலும், அக்கதையை சூர்யாவிடம் சொன்னபோது, ரஜினிக்காக எழுதிய கதையா எனக் குறிப்பிட்டு கேட்டார். அதன் பிறகு அக்கதையில் சற்று மாற்றம் செய்து காதல் கதையாகச் சூர்யாவிடம் மீண்டும் கூறினேன் என்றார் கார்த்திக் சுப்புராஜ்.
இதற்கிடையே, அவரின் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கும் நாயகர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வேறு யாருமில்லை சிவகார்த்திகேயன் தான்.
அண்மையில், அவரை நேரில் சந்தித்த கார்த்திக் சுப்புராஜ், அவரிடம் கதை சொன்னதாகவும் அப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’, சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ ஆகிய திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
அவ்விரு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.