கதைதான் நிஜமான நாயகன்: ‘மிடில் கிளாஸ்’ முனீஷ்காந்த் நெகிழ்ச்சி

2 mins read
c0b1feb4-58e2-4a99-b659-d2a59fba609b
‘மிடில் கிளாஸ்’ படத்தில் நடித்திருக்கும் நாயகன் முனீஷ்காந்த்துடன் நாயகியாக நடித்திருக்கும் விஜயலட்சுமி. - படம்: இந்திய ஊடகம்

‘மிடில் கிளாஸ்’ படத்தில் கதைதான் நாயகன். நான் அல்ல என்று நடிகர் முனீஷ்காந்த் விளம்பர நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

ஆக்ஸிஸ் ஃபிலிம் ஃபேக்டரியும் குட் ஷோ தயாரிப்பிலும் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மிடில் கிளாஸ்’. இதில் நடிகர்கள் முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் விளம்பர வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய நடிகர் முனீஷ்காந்த், “இயக்குநர் கிஷோர் என்னிடம், ‘நீங்கள்தான் இந்தப் படத்தின் நாயகன்’ என்றார். நான் முதலில் முடியாது என்று மறுத்தேன். ஆனால், கதையைக் கேட்ட பிறகு, ‘கதைதான் நிஜமான நாயகன்; நான் அல்ல’ என்று எனக்குப் புரிந்தது.

“அதனால்தான் நடிக்க ஒத்துக்கொண்டேன். இந்தப் படத்திற்காக நான் எதிர்பாராத பெரிய சம்பளத்தை தயாரிப்பாளர் டில்லி பாபு கொடுத்தார். திறமைகளை மதித்து வளர்த்துவிடும் டில்லி பாபு போன்ற பல தயாரிப்பாளர்கள் சினிமா துறைக்குத் தேவை,” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

படம் குறித்துப் பேசிய இயக்குநர் கிஷோர் எம்.ராமலிங்கம், “ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் மாறுபட்ட மனநிலையில் இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகளைச் சுற்றியே கதை நகர்கிறது.

“கிராமத்தில் நிலம் வாங்கி வீடு கட்டி நிம்மதியாக வாழ வேண்டும் என்பது முனீஷ்காந்தின் ஆசை.

“நகரத்திலேயே ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பது அவரது மனைவியாக நடிக்கும் விஜயலட்சுமியின் ஆசை.

“இதனால் அவர்கள் அடிக்கடி மோதிக்கொள்வார்கள். முனீஷ்காந்த் தனது ஆசையை வெளிப்படுத்தினாலும் அதைச் சர்ச்சையாக்காமல் மனத்துக்குள் புழுங்கிக்கொண்டு அமைதியாகக் குடும்பத்தை நடத்துபவராக இருக்கிறார்.

“அப்போது அவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன என்பதுதான் கதை.

“முதலில் ஒரு குடும்பக் கதையாகச் சென்று, பிறகு யூடியூப் பற்றிய கதையாக மாறி, அதன்மூலம் ஒரு குடும்பம் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறது என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறேன்,” என்றார்.

இப்படம் இம்மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாசெய்தி