சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள படத்தை இயக்கியுள்ளார் நந்தா பெரியசாமி. இவர் ஏற்கெனவே ‘மாத்தி யோசி’, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்நிலையில், மின்னிலக்க உலகத்தில் நேர்மையாக வாழ முடியுமா என்ற கேள்வியை அலசும்விதமாக ‘திரு.மாணிக்கம்’ படத்தை இயக்கி உள்ளதாகச் சொல்கிறார்.
“நேர்மைக்கும் மனசாட்சிக்கும் எளிய மனிதர்கள்தான் பயப்படுவார்கள். அவர்களைப் போல் மற்றவர்கள் அஞ்சுவதில்லை.
“இன்று எல்லாமே ‘கார்பரேட்’ மயமாகி வியாபாரமாகிவிட்டது. அப்படி எந்தவித மனிதாபிமானமும் இல்லாமல் வாழும் மனிதர்களுக்கு இடையே வாழும் ஓர் எளிய மனிதனைப் பற்றிய கதை இது.
“இந்தப் படத்தில் நாயகன் திரு.மாணிக்கம் நேர்மையை மட்டுமே வலியுறுத்துவார். அதைக்கேட்டு எல்லோரும் மாணிக்கமாக வாழ ஆசைப்பட்டால் அதுதான் இந்தப் படத்தின் வெற்றியாக இருக்கும்,” என்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி.
சாதாரண மனிதராக இருக்கும் மாணிக்கம் என்பவர், எப்படி மரியாதைக்கு உரியவராக, திரு.மாணிக்கமாக மாறுகிறார் என்பதை யதார்த்தமான காட்சிகளோடு திரையில் விவரித்திருப்பதாக கூறுபவர், ‘திரு’ என்ற அடையாளத்தை அடைவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்கிறார்.
“ஒருவர் செய்யும் செயல், வாழும் வாழ்க்கையின் மூலமாகத்தான் அந்த அடையாளம் கிடைக்கும் என்றும் ஒவ்வொரு தனி மனிதனும் தன் பெயருக்கு முன்னால் ‘திரு’ என்ற அடையாளத்தை சேர்த்துக் கொள்வதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் படம் சொல்லும் நீதி,” என்றும் இயக்குநர் நந்தா சொல்கிறார்.
“பணம், பொருள், செல்வாக்கு ஆகியவை ஒரு மனிதனை மரியாதைக்கு உரியவராக மாற்றாது. பணம் என்பது பாதை மாதிரி என்றால், மரியாதை என்பது வெளிச்சம் போன்றது. வெளிச்சம் இல்லாத பாதையில் பயணம் செய்ய முடியாது.
தொடர்புடைய செய்திகள்
“இதுவரை படம் பார்த்த அனைவருமே இந்தக் காலகட்டத்துக்குக்கேற்ற படம் என்றுதான் ஒருமித்த குரலில் கருத்து தெரிவித்தனர். மக்களும் அதைச் சொல்ல வேண்டும் என்ற ஆவலோடு காத்திருக்கிறோம்,” என்று சொல்லும் நந்தா, இப்படத்தில் சமுத்திரக்கனிக்கு அதிக வசனங்கள் இல்லை என்றும் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்.
வழக்கமாக ஒவ்வொரு படத்திலும் நிறைய கருத்துகளைப் பேசுவார் சமுத்திரக்கனி. ஆனால், இந்தப் படத்தில் அவருக்கு மொத்தமே அரை பக்க வசனங்கள்தானாம்.
அதேசமயம் கொஞ்சமாகப் பேசினாலும் அந்த வசனங்கள் அழுத்தமாக இருக்குமாம்.
“கதைப்படி அவர் அதிகம் பேசமாட்டார். அவர் செல்லும் பாதை மட்டுமே பேசப்படும். தன்னைப் பற்றி அவர் எதுவும் பேசமாட்டார். ஆனால் மற்றவர்கள்தான் அவரைப் பற்றி அதிகம் பேசுவார்கள்.
“மலையாளம், தெலுங்கு எனப் பரபரப்பாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி. கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்தப் படத்தில் நடிக்க ஒரு மாதம் கால்ஷீட் கொடுத்தார்.
“அதேபோல் இயக்குநர் பாரதிராஜா ஐயாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது மற்றொரு சிறப்பம்சம். எங்களுக்காக மருத்துவமனையில் இருந்து வந்து நடித்து கொடுத்துவிட்டுச் சென்றார். ‘ஆக்ஷன்’ என்று சொன்னதும், சட்டென சிங்கம்போல் நிமிர்ந்து, தன் முகபாவத்தை மாற்றி நடித்தபோது படக்குழுவினர் அனைவருக்குமே பெரும் உற்சாகம் வந்துவிட்டது,” என்கிறார் நந்தா பெரியசாமி.
இந்தப் படத்தில் ‘சுப்ரமணியபுரம்’ அனன்யா நாயகியாக, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்துள்ளார்.