இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு முன்னணி நாயகர்கள் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் கபடி விளையாட்டைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி உள்ளது.
‘பைசன் காளமாடன்’ குறித்து அண்மைய பேட்டி ஒன்றில் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் மாரி செல்வராஜ். இனி அவர் சொல்வதைக் கேட்போம்.
“என் மனத்துக்கு நெருக்கமான படைப்பாக ‘பைசன்’ உருவாகி உள்ளது.
“தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மனத்தி கணேசன் பிரபல கபடி வீரர். என் உறவினர். சிறு வயதில் எனக்கு அவர்தான் பெரிய கதாநாயகன். கபடி ஆட்டம் என்றால் எல்லா ஊருக்கும் போய்ப் பார்ப்போம். இயக்குநர் ஆனதும் அவரிடம் பேசினேன். அவருடைய பயணம் பற்றிப் பேசும்போது, அதைத் திரைப்படமாக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
“ஆனால், இந்தப் படத்தை அவருடைய படமாக மட்டுமே உருவாக்க முடியாது. இதை அவருடைய முழுமையான வாழ்க்கை என்றும் சொல்ல முடியாது. அவருடைய வெற்றி, அயராத உழைப்பை எடுத்துக்கொண்டு நிறைய பேரின் கதையையும் சேர்க்க வேண்டி இருந்தது. ‘காளமாடன்’ என்பது ஒருவருடைய பெயர் மட்டுமல்ல. எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று தென் மாவட்டங்களில், துடித்துக் கொண்டிருக்கும் பலரது அடையாளம்தான் இந்தப் பெயர்.
“இதற்கு முதல் பிடிமானம், மனத்தி கணேசனின் கபடியும் வாழ்க்கையும் வெற்றியும்தான். பலதரப்பட்ட தென் தமிழகம் சார்ந்த இளையர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் பின்னலும் சேர்ந்த புனைவும்தான் இந்தத் திரைக்கதை.
தொடர்புடைய செய்திகள்
“இப்படத்தை உருவாக்க நினைத்ததே ஒரு சவால்தான். முழுக்க முழுக்க கபடி விளையாட்டைச் சார்ந்த கதை. அந்த விளையாட்டை உண்மையான முறையில் கையாள வேண்டும். 30 நாள்களுக்கு மேல் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.
“உண்மையான கபடி வீரர்கள் 70 பேர் நடித்துள்ளனர். கதாநாயகன் மட்டுமே நடிகர். எனக்கும் திடலில் இறங்கி கபடி விளையாடத் தெரியும். இயக்குநர் ரஞ்சித் (அண்ணா) இந்தக் கதைதான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். அதிக பணம் செலவாகும் என்று சொன்னேன். அவர் விடுவதாக இல்லை. இது மக்களுக்குச் சொல்லியாக வேண்டிய கதை. என்ன செலவானாலும் ஒருகை பார்த்துவிடுவோம் என்றார். இப்படித்தான் ‘பைசன்’ உருவானது.
“இன்றைக்கும் பதற்றமான தென்தமிழகத்தில் இருந்து தப்பித்துப் பிழைத்து ஓடிவந்து தன் இலக்கை அடைந்த நிறைய இளையர்களின் கதையும் இதில் இருக்கிறது. அந்த வெக்கையிலிருந்து, ரத்தத்திலிருந்து தப்பித்து வந்து ஓரிடம் அடைந்தவர்களின் கதையும் இருக்கிறது. அடைய முடியாதவர்களின் கதையும் இருக்கிறது. இன்றைக்கு இந்தக் கதையைச் சொல்வதன் மூலம் நாம் எப்படி, என்னவாக இருக்கிறோம் என்பது புரியும். அடைய முடியாதது என ஒன்று இல்லை.
“இதில் மனத்தி கணேசன் கதையும் இருக்கிறது. என்னுடைய கதையும் இருக்கிறது.
“என் ஒட்டுமொத்த வாழ்க்கையின் ஆகப்பெரிய நம்பிக்கையாக இந்த ‘பைசன் காளமாடன்’ கதையைப் பார்க்கிறேன். இதை ஒரு நம்பிக்கையான வடிவத்திற்கு மாற்றிச் சொன்னபோது நிறைய பேர் பயந்தனர். இதற்குள் ஒரு நேர்மை, ஆன்மா, உண்மை இருக்கிறது. அந்த நிஜத்தைச் சிதைக்காமல் அதை நிஜமாக எடுத்து, அதை ஒரு கலை வடிவத்திற்கு மாற்றினாலே போதுமானது.
“நான் தொடக்கத்தில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் பதற்றமாக இருந்தேன். அப்படிப் பார்த்தால் என் திரைப்பயணத்தில் ஒவ்வொரு நாளும் பதற்றமாக இருந்தது இந்தப் படம்தான்,” என்கிறார் மாரி செல்வராஜ்.