“சிவகார்த்திகேயனும் நானும் சில ஆண்டுகளுக்கு முன்பே இணைந்திருக்க வேண்டும். அது இப்போதுதான் கைகூடியிருக்கிறது,” என்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
இருவரையும் இணைய வைத்திருப்பது ‘மதராஸி’ திரைப்படம்.
இந்தப் படத்தின் நாயகனுக்கான கதாபாத்திரம் தன் மனத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் முருகதாஸ்.
“அந்தக் கதாபாத்திரம்தான் இப்போது ‘மதராஸி’யாக உருவாகியுள்ளது. கொரோனா காலகட்டத்தில்தான் சிவாவைச் சந்தித்தேன். அச்சமயம் அவர் ‘அனிமேஷன்’ படத்துக்கான பணிகளில் மூழ்கியிருந்தார். அதை என் கனவுப் படம் எனக் கூறலாம். அதை முடித்த பிறகு இருவரும் இணைந்து செயல்படலாம் என முடிவு செய்தோம்.
“ஆனால், பட்ஜெட் பிரச்சினை காரணமாக, ‘அனிமேஷன்’ படம் தள்ளிப்போனது. அதன் பிறகுதான் ‘மதராஸி’க்கான கதைக்களத்தை முழுமையாக உருவாக்கினேன்,” என்று முருகதாஸ் கூறியுள்ளார்.
கதைப்படி, வில்லன் வட இந்தியாவைச் சேர்ந்தவர். பொதுவாக வடஇந்தியர்கள் சென்னைவாசிகளை ‘மதராஸி’ என்றுதான் குறிப்பிடுவார்கள். ஒரு வட இந்தியரின் பார்வையில்தான் இந்தக் கதை பயணிக்குமாம்.
இதில் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பெயர் ரகு.
வழக்கமான மனிதர்களில் இருந்து வித்தியாசமான குணாதிசயம் கொண்டவராக இந்த ரகு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
‘மதராஸி’ படப்பிடிப்பு ஒரு கல்லூரியில் நடைபெற்றபோது, அங்கு சிவாவைக் காண திரண்ட ரசிகர் கூட்டத்தைக் கண்டு தாம் மிரண்டுபோனதாகக் குறிப்பிட்டுள்ள முருகதாஸ், அவர் மக்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டார் என்பது தமக்குத் தெளிவாகப் புரிந்தது என்று கூறியுள்ளார்.
“அஜித், விஜய் போன்றவர்களுக்கு நடிக்க வந்த தொடக்கத்திலேயே ‘ஆக்ஷன்’ நாயகன் என்ற பட்டம் கிடைத்துவிட்டது. ஆனால் சிவா, படிப்படியாக பல கட்டங்களைத் தாண்டி, இப்போதுதான் ஆக்ஷன் வட்டத்துக்குள் நுழைந்திருக்கிறார்.
“கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நடந்த பிரம்மாண்ட வளர்ச்சியாக சிவாவையும் அனிருத்தையும் குறிப்பிடலாம். இருவரையும் பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. இன்று இருவரும் எட்டிப்பிடித்துள்ள உயரமும் உயரத்துக்கான தகுதியும் கடின உழைப்பும் அவர்களிடம் உள்ளது.
“சிவாவைப் பொறுத்தவரை, மற்ற புதுமுகங்களுடன் அவரை ஒப்பிட முடியாது. அவர் திரைத்துறைக்குத்தான் புதியவரே தவிர, மக்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான முகம். சின்னத்திரை மூலம் குழந்தைகளையும் பெரியவர்களையும் கவர்ந்த பிறகே சினிமாவுக்கு வந்துள்ளார்.
“அவரது நகைச்சுவை உணர்வு தனிச்சிறப்பு வாய்ந்தது. அனைவரிடமும் கலகலப்பாகப் பேசுகிறார். பல இயக்குநர்களை அறிமுகப்படுத்துகிறார். படப்பிடிப்பு இடைவெளியின்போது உதவி இயக்குநர்கள் அத்தனை பேரிடமும் பேசிக்கொண்டிருப்பார்,” எனப் பாராட்டியுள்ளார் முருகதாஸ்.
‘மதராஸி’யில் சிவகார்த்திகேயனுக்கு இரட்டை வேடங்கள் என்பது தவறான தகவலாம். கதைப்படி, ஆறு மாத இடைவெளியில் இரண்டுவிதமான தோற்றங்களில் வருவாராம்.
‘துப்பாக்கி’ பட வில்லன் வித்யுத் ஜம்வால் பாலிவுட்டில் தற்போது கதாநாயகனாக உயர்ந்துவிட்டார். அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்து சிவாவுக்கு வில்லனாக்கியுள்ளார் முருகதாஸ். நாயகியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார்.
வித்யுத் ஜம்வால் தற்போது ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார். பல பெரிய இயக்குநர்கள் அவரை மீண்டும் வில்லனாக நடிக்க அழைத்தபோது மறுத்துவிட்டவர், ‘மதராஸி’ கதையைக் கேட்டவுடன் சம்மதித்ததாக கூறியுள்ளார் முருகதாஸ்.
ருக்மிணி வசந்த் ஏற்றுள்ள மாலதி கதாபாத்திரம், நிச்சயம் தமிழ் ரசிகர்களால் பேசப்படுமாம். மேலும், மலையாள நடிகர் பிஜு மேனன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.