ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் கதாசிரியர் ‘அன்னக்கிளி’ செல்வராஜ். இவரது கதையுடன் உருவான பல படங்கள் பெரும் வெற்றி கண்டவை.
அதிலும் பாரதிராஜாவுக்காக இவர் எழுதிய கதைகளுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தன. மணிரத்னம் இயக்கிய ‘இதய கோயில்’, ‘அலைபாயுதே’ இரண்டுமே இவரது கதைகள்தான்.
பாரதிராஜா போன்றவர்கள் திரையுலகில் பணியாற்றுவதைக் குறைத்துக் கொண்டபோது, செல்வராஜும் கோடம்பாக்கத்தில் இருந்து மெல்ல விலகினார்.
எனினும் ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்குமா?
தன்னுடைய மகன் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில், ஆண்ட்ரியா நடிப்பில் ‘கடல் கன்னி’ (The Mermaid) என்ற படத்துக்கான கதையை எழுதியிருக்கிறார் செல்வராஜ்.
குழந்தைகளுக்கான கற்பனைக் கதையுடன் உருவாகி இருக்கும் இந்தப் படம் கோல்கத்தா, ஜெய்ப்பூர், கோவா, புதுவை எனப் பல இடங்களில் நடந்த அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளியுள்ளது.
“நான் மணிரத்னத்தின் பட்டறையிலிருந்து வந்தவன். இதற்கு முன்பு விக்ரம் பிரபு நடிப்பில் ‘துப்பாக்கி முனை’ உட்பட சில படங்களை இயக்கியுள்ளேன்.
“மணிரத்னத்துக்கு ‘கடல் கன்னி’ படக் கதை முன்பே தெரியும். ‘அலைபாயுதே’ படத்தின்போதே அவரிடம் விவரித்துள்ளேன். இப்படிப்பட்ட கதையை இப்போது நான் திரைப்படமாக உருவாக்கியதில் ஒரு குருவாக அவருக்குக் கூடுதல் மகிழ்ச்சி,” என்கிறார் தினேஷ்.
தொடர்புடைய செய்திகள்
இவர் இயக்கிய ‘துப்பாக்கி முனை’ படத்தை தாணு தயாரித்திருந்தார். மீண்டும் அவரது தயாரிப்பில் துல்கர் சல்மான் நடிப்பில் ஒரு படத்தை எடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால் அது கைகூடவில்லை.
“அப்போதுதான் ‘கடல் கன்னி’ கதை குறித்து நினைவூட்டி, அதை மீண்டும் விவரித்தார். சிறு வயதிலேயே எனக்கு இந்தக் கதை பிடிக்கும்.
“ஆனால், இந்த முறை அப்பா மீண்டும் கதையைச் சொன்னபோது எல்லாமே புதிதாக இருப்பதுபோல் தோன்றுகிறது. ‘நீ எந்தக் கதாநாயகனையும் தேடிப்போக வேண்டியதில்லை. இந்தக் கதைதான் கதாநாயகன்’ என்று அப்பா சொன்னது உற்சாகமாக இருந்தது.
“ஆனால் சிறு வயதில் கேட்டு ரசித்த கதையை நான் இயக்குவேன் என நானே எதிர்பார்க்கவில்லை. என் நண்பர்களிடம் கதையைச் சொன்னபோது, வெகுவாக ரசித்ததுடன் தயாரிப்பாளர்களையும் அறிமுகம் செய்துவைத்தனர்.
“ஆண்ட்ரியா, சுனைனா என முதன்மைக் கதாபாத்திரங்களுக்கான நடிகைகளை ஒப்பந்தம் செய்ததும் அதே வேகத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி, இதோ வெளியீட்டையும் நெருங்கிவிட்டோம்,” என்று உற்சாகம் குறையாமல் பேசுகிறார் தினேஷ்.
திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு கிராமத்தில்தான் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கி உள்ளனர்.
ஒவ்வோர் காட்சியும் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அழகாகவும் அற்புதமாகவும் இருக்கும் என்று இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழில் குழந்தைகளுக்கென முழுநீளத் திரைப்படம் வெளியாகி நீண்ட காலமாகிவிட்டது என்ற மனக்குறையைப் போக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பதாகச் சொல்கிறார் தினேஷ்.
மேலும், அண்மைக் காலமாக வன்முறையை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் படங்கள்தான் வெற்றி பெறுகின்றன. இந்தப் படத்தில் அதுபோன்ற அம்சங்கள் எதுவும் இருக்காது என்றும் உறுதியளிக்கிறார்.
“என் படங்களில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் மிகுந்த மனிதர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என நினைப்பேன். அப்படிப்பட்ட கதை மாந்தர்கள்தாம் இந்தப் படத்திலும் உள்ளனர்.
“ஆதரவற்ற சிறுவர், சிறுமியர் விடுதியில் நடக்கும் கதை இது. பெற்றோருக்காக ஏங்கும் சிறுவர்களில் ஒருவனான நீலன், ஆண்ட்ரியா எழுதிய ‘ஜோகி’ புத்தகத்தை வாசிக்கத் தொடங்குகிறான். அந்தக் கதையில் வரும் கடல் கன்னியின் பெயர்தான் ஜோகி.
“கடலில் உள்ள அனைத்து உயிர்களுக்குமே தாயாக இருப்பது கடல் கன்னிதான் என்ற வரிகளைப் படிக்கும் அச்சிறுவன் கண் கலங்குகிறான். பிறகு அந்தக் கடல் கன்னியைத் தன் தாயாகவே நினைக்கிறான்.
“இந்தச் சூழலில் அந்த ஆதரவற்றோருக்கான விடுதிக்கு வருகிறார் எழுத்தாளர் ஆண்ட்ரியா. அதன் பின்னர் நடக்கும் நெகிழ்ச்சியான சம்பவம்தான் இந்தப் படத்தின் கதை,” என்கிறார் தினேஷ்.
கதைப்படி, ஆண்ட்ரியா எழுத்தாளராகவும் சுனைனா விடுதி காப்பாளராகவும் நடித்துள்ளனர்.
மேலும், முனீஸ்காந்த், இந்துமதி முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க, ஏ.ஆர்.ரகுமானின் சீடரான ஜெர்ரி சில்வஸ்டர் வின்சென்ட் இசையமைத்துள்ளார்.

