ஐஸ்வர்யா தனு‌ஷின் புதிய அவதாரம்

ஐஸ்வர்யா தனு‌ஷின் புதிய அவதாரம்

1 mins read
008e1d5c-78e9-4176-9d46-64c85a785f8b
-

ரஜினியின் மகளும் தனு‌ஷின் மனைவியுமான ஐஸ்வர்யா '3' படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து 'வை ராஜா வை' என்னும் படத்தை இயக்கி வெற்றி பெற்றார். இவர் அடுத்ததாக எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் 'ஒரு ஆப்பிள் பெட்டி மீது நின்றுகொண்டு' (Standing on an Apple Box) என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். இந்தப் புத்தகம் மூலம் எழுத்தாளராக அறிமுகமாக இருக்கும் இவர், தனது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்கள், தனது தந்தை ரஜினி பற்றி விரிவாக எழுதி இருக்கிறாராம்.

"இந்தப் புத்தகத்தில் சினிமா களத்தில் இருந்துகொண்டு மகிழ்ச்சிகரமான கதைகளையும் நினைவுகளையும் பதிவு செய்துள்ளேன். எனது சொந்த அனுபவங்களாக இருந்தாலும் இதிலிருந்து பெண்களுக்குத் தேவையான பல முன்னுதாரணங்களைப் பிரதிபலித்திருப்பதாகவே கருதுகிறேன். அத்துடன் ஒவ்வொரு பெண் ணும் வாழ்க்கையின் சுக துக்கங்களையும் எப்படிச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்பதையும் விவரித்துள்ளேன்," என்கிறார் ஐஸ்வர்யா. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை ஹார்பர் காலின்ஸ் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியிட இருக்கின்றது.