நகைச்சுவை நடிகர் கவுண்டமணியை இசை வெளியீட்டு விழாவில் ஏகத்துக்கும் பாராட்டிப் பேசினார் நடிகர் சந்தானம். ஜெயராம் புரொடக்சன்ஸ் வழங்கும் படம் 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது'. சுசீந்திரன் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இப்படத்தை சண்முகம் தயாரித்துள்ளார். நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நாயகனாக நடித்துள்ளார். அவர் இப்படத்தில் கேரவன் கிருஷ்ணன் எனும் கதாபாத்திரத்தில் நாத்திகவாதியாக தோன்றுவாராம்.
மற்றொரு நாயகனாக சௌந்தர், நாயகியாக ரித்விகா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் சந்தானம் பேசும்போது, "நகைச்சுவை நடிகர்களுக்கு அகராதி என்றால் அது கவுண்டணி சார் தான். எனக்கு ஒரு படத்தில் ஏதாவது ஒரு காட்சியை சேர்க்க வேண்டும் என்றால் யூடியூபில் கவுண்டமணி சாரின் நகைச்சுவையைப் பார்த்து தேவையானதை எடுத்து நடிப்பேன். இதேபோல் எல்லா நடிகர்களும் அவரை பின்பற்றுகிறார்கள். அவருக்கு இணை யாரும் கிடையாது," என்றார்.

