தமிழ் நடிகைகளை, தமிழ்ப் பேசும் நடிகைகளைத் திரையுலகினர் புறக்கணித்து வருகிறார்கள் என வேதனையை வெளிப் படுத்தியுள்ளார் இளம் நாயகி ஸ்ரீபிரியங்கா. 'கங்காரு', 'வந்தாமல', 'கோடை மழை' போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா. இப்போது 'சாரல்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சாரல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரியங்கா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "நான் நடித்த மூன்று படங்களிலுமே எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. எந்தக் காட்சியிலும் சொதப்பியதில்லை. எல்லா இயக்குநர்களிடமும் நல்ல பெயர் பெற்றிருக்கிறேன். இருந்தாலும் எனக்கு ஏன் இன்னும் தமிழ்த் திரை யுலகில் முன் னணி இடம் கிடைக்கவில்லை? தமிழ்ப் பொண்ணு என்பதாலா? என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது.
இந்தக் கேள்வியை எனக்குள்ளே வைத்துக்கொண்டிருப்பதைவிட, ஊடகங்கள், திரையுலகப் பிரமுகர்கள் இருக்கும் இந்த மேடையில் வெளிப்படுத்தினால் விடை கிடைக்குமோ என்றுதான் இங்கே சொல்கிறேன். "இந்தப் படத்தின் இயக்குநர் பேசுவதுகூட அடுத்தவருக்குக் கேட்காது. அத்தனை சாதுவானவர். எனக்கு இந்தப் படத்திலும் நல்ல வேடம். சாரல் உங்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் என நம்புகிறேன்," என்றார். ஸ்ரீபிரியங்கா பேசி முடித்ததும் மைக் பிடித்த விஜய் சேதுபதி, "இப்போது பேசிய ஸ்ரீபிரியங்கா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "பார்க்க லட்சணமாக அழகாக இருக்கிறார். பெரிய வாய்ப்புகள் வரவில்லையே என்று புலம்ப வேண்டாம். "நிச்சயம் அடுத்தடுத்துப் பெரிய வாய்ப்புகள் அவருக்கு வரும்," என்றார்.

