அட்லீ படத்தை விமர்சிக்கும் ரசிகர்கள்

1 mins read
da893d0d-9f55-4699-a31b-b82076801818
-

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள 'தெறி' ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சில திரையரங்குகள் தவிர மற்ற திரையரங்குகளில் ஓடி வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஆனால் இந்தப் படத்தின் கதையில் வரும் காட்சிகளும் அட்லீயின் முந்தைய படமான 'ராஜா ராணி' படத்தில் வரும் சில காட்சிகளும் ஒன்று போலவே இருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அதன் ஒற்றுமை பற்றி ரசிகர்கள் சிலர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இரண்டு படங்களிலும் காதலன் முன்னாலேயே நாயகி இறந்துவிடுவர். 'ராஜா ராணி'யில் ஆர்யா முன் நஸ்ரியாவும் 'தெறி'யில் விஜய் முன் சமந்தாவும் இறந்துவிடுவார்கள்.

இரண்டிலும் கதாநாயகனின் முன்னைய வாழ்க்கைக் கதையை நகைச்சுவை நடிகர்கள்தான் சொல்வார்கள். ராஜா ராணியில் சந்தானமும் தெறியில் மொட்டை ராஜேந்திரனும் கதாநாயகனின் கதையைச் சொல்வார்கள். நாயகன் இரண்டிலுமே சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தது போல் நடித்து முடிவில் மீண்டும் வருவார்கள். ராஜா ராணியில் ஜெய்யும் தெறியில் விஜய்யும் அப்படி வருவார்கள். இரண்டு படத்திலுமே நாயகிக்கு அம்மா கிடையாது. அப்பா மட்டும்தான். இரண்டிலும் நாயகிதான் காதலைச் சொல்வார். ராஜா ராணியில் நயன்தாராதான் காதலைச் சொல்வார், தெறியில் சமந்தாதான் சொல்வார். இப்படி ரசிகர்கள் ஒற்றுமை வேற்றுமைகளை வகைப்படுத்தி வருவது அட்லீக்குத் தெரிந்திருக்கும். அடுத்த படத்தில் இதைப் போன்ற ஒற்றுமைகளை அவர் தவிர்ப்பார் என்று கோலிவுட் வட்டாரம் கூறுகிறது.