தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உதயநிதிக்கு குவியும் பாராட்டுகள்

2 mins read
636e0c31-8914-44a0-b08f-41b3514f8312
-

'மனிதன்' படத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டம். படத்தில் 'உதவாக்கரை' என்று பெயரெடுத்த உதயநிதிக்கு அவருடைய மாமா தன்னுடைய பெண் ஹன்சிகாவை மணமுடித்து கொடுக்க மறுக்கிறார். அதனால் மனம் நொந்துபோய் ஏதாவது வழக்கு கிடைக்காதா என்று சென்னைக்குச் செல்கிறார் உதயநிதி. அங்கு வழக்கறிஞரான விவேக்குடன் சேர்ந்து வழக்குக்காக அலைகிறார். அப்போது அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. நள்ளிரவில் குடிபோதையில் சொகுசுக் கார் ஒன்றை ஓட்டி வரும் கோடீஸ்வரனின் வாரிசு, நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றி 6 பேரைக் கொல்கிறார். ஆனால் வழக்கறிஞர் பிரகாஷ் ராஜ் அந்த வாரிசுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கிறார்.

"இந்த விவகாரத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடர்ந்தால் நாமும் பிரபலமாகலாம். பாதிக்கப் பட்டவர்களுக்கும் ஏதாவது நல்லது நடக்கும்," என்று திட்டமிட்டு பொதுநல வழக்கு தொடர்கிறார் உதயநிதி. அதன்பிறகுதான் அவருக்குப் பல பிரச்சினைகள். இவற்றை எப்படிச் சமாளிக்கிறார்? ஹன்சிகாவைக் கைப்பிடித்தாரா? பொதுநல வழக்கில் வென்றாரா என்பது கதையின் பிற்பகுதி. இந்தப் படத்தில் யதார்த்தமாக நடித்த உதயநிதிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. ஒருபக்கம் ஜாம்பவான் ராதா ரவி, மறுபக்கம் அட்டாக் ஆதிசேஷனாக வரும் பிரகாஷ் ராஜ். இருவருக்கும் இடையில் தன்னாலும் கச்சிதமான நடிப்பைத் தர முடியும் என்று நிரூபித்திருக்கிறார் உதயநிதி.

ஒரு காட்சியில் நடைபாதையோரம் சிறுநீர் கழிக்கப் போவார் உதயநிதி. அப்போது ஒரு கூட்டம் அங்கே வந்து, "ஐயா கொஞ்சம் தள்ளிப் போங்கள். நாங்கள் படுக்கும் இடம் இது," என்று அவர்கள் கெஞ்சி நிற்கும்போது மனசு கரைந்து போகிறது. அதை உதயநிதி மிக அருமையாக வெளிப்படுத்தியிருப்பார். நீதிமன்றக் காட்சிகளில் ராதா ரவி, பிரகாஷ் ராஜுக்கு இணையாக ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் உதயநிதி.