ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் புதிய படத்தின் பெயரை அறிவித்திருக்கின்றனர். அஜீத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, சிம்பு தனது புதிய படத்தின் தலைப்பை அறிவிக்க இருப்பதாக ஏற்கெனவே கூறியிருந்தார். 'ஏஏஏ' என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டிருந்த அந்தப் படத்தின் புதிய தலைப்பை, சொன்னபடி நள்ளிரவு 12.01 மணியளவில் சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்தார்.
இந்தப் புதிய படத்திற்கு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்று பெயர் வைத்திருக்கின்றனர். மேலும் இதன் முதல் சுவரொட்டியையும் வெளியிட்டிருக்கின்றனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பிரபலமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தை, மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாகவும், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

