சுதாஸகி ராமன்
மாலை மயங்கும் வேளையில் வண்ண ஆடைகள் கண்களைப் பறிக்க, நெடுக விரிக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பளத்தில் நளினமும் கம்பீரமாகப் பவனி வந்து பார்வையாளர்களின் மனங்களைக் கொள்ளைகொண்டனர் 'சைமா' விருது முதல் நாள் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த திரை நட்சத்திரங்கள். கைதேர்ந்த ஆடை வடிவமைப்பாளர்களின் கைவண்ணத்தில் மிளிர்ந்த அழகான உடைகளை அணிந்து 'ஆவ்டி' கார்களிலிருந்து இறங்கிய நட்சத்திரங்களைச் சுற்றி வளைத்த புகைப்படங்களின் வெளிச்சம் இரவைப் பகலாக் கியது.
இதற்கிடையில், ரசிகர்களின் கைபேசிகளில் செல்ஃபி எடுத்துக் கொடுக்க நட்சத்திரங்கள் மறுக்கவில்லை. கன்னட, தெலுங்கு திரைப்பட உலகின் நடிகைகள், நடிகர்கள், திரைப்பட இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் என்று 'சைமா' விருது நிகழ்ச்சியின் முதல் நாளில் நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க ப்ரணிதா, பிரக்யா ஜெய்ஷ்வால் ஆகிய நடிகைகள் துடிப்பாக நடனமாடி ரசிகர்களைக் கவர்ந் தனர். கடந்த ஆண்டில் வெளியிடப்பட்ட திரைப்படங்களில் இடம் பெற்ற பிரபல தெலுங்கு, கன்னடப் பாடல்களுக்குக் கண்கவர் நடனங்களை ஆடிய நட்சத்திரங் களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் ஆர்ப்பரித்தனர்.
ஆந்திராவின் விஜயவாடாவிலிருந்து வந்து கடந்த ஓராண்டாக சிங்கப்பூரில் பயிலும் கோல்மன் கல்லூரி மாணவர்கள் மூவர் தங்களுக்குப் பிடித்தமான நட்சத்திரங்களைக் கண்டுவிடவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பிற்பகல் மூன்று மணிக்கெல்லாம் சன்டெக் மாநாட்டு மையத்துக்கு வந்தனர். "எனக்குப் பிடித்தமான நடிகரான சிரஞ்சீவியை நேரில் காண வந்துள்ளேன். என் தாய்நாட்டில் கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு சிங்கப்பூரில் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி," என்றார் 21 வயது ராம்சரண்.

