தமிழவேல்
பின்னிரவு 1 மணி இருக்கும். தூக்கக் கலக்கத்தில் சோர்வ டையத் தொடங்கிய பார்வையாளர் கள் திடீரென உற்சாகம் அடைந் தனர். கைத்தொலைபேசிகளுடன் இருக்கையை விட்டு எழுந்தனர். சிங்க நடனத்துடன் அட்டகாசமாக அரங்கிற்குள் நுழைந்த அனிருத், கூட்டத்தின் உணர்ச்சியை மெல்ல மெல்ல உச்சத்திற்குக் கொண்டுசென்றார். 'தெறி'யில் அதிர வைக்கத் தொடங்கிய அவர், 'தங்கமே', 'ஓலா அமீகோ'வில் ஆரம்பித்து 'மாரி'யில் சுருதியேற்றி, 'ஆலுமா டோலுமா'வுக்கு அரங்கையே ஆட வைத்தார் அனிருத். மேடையை விட்டு இறங்கி வந்து, அவர் ஆடியபடியே பாட, ஆண்கள், பெண்கள், பெரியவர் கள், சிறுவர்கள் அனைவருமே எழுந்து நின்று ஆடத் தொடங் கினர். வேகமான இசையும் கணீரென்று ஒலித்த அனிருத்தின் குரலும் நிகழ்ச்சிக்கு முத்தாய்ப் பாய் அமைந்தது.
அனிருத்துக்கு இணையாக அசத்தலான நடனத்தால் கூட்டத் தைக் குதூகலிக்க வைத்தார் ஹன்சிகா மோத்வானி. காவலர்கள் சூழ வரும் தேவதை போல் பிரம்மாண்ட ஊர்தியில் கழுத்திலிருந்து கால் வரை போர்த்திய உடையுடன் அரங் கினுள் நுழைந்த ஹன்சிகா, நிமிடத்திற்குள் மாறிய இசைக்கு ஏற்ப தாளத்தை மாற்றி வேகமாக அவர் ஆடிய ஆட்டமும் ஆடை மாற்றிய வேகமும் அசர வைத்தன. 'ஓ காதல் கண்மணி' படத்திற் காக சிறந்த பாடலாசிரியர் விருதை வைரமுத்துவுக்கு அறிவித்தவர் படத்தின் பெயரைச் சரியாக உச்சரிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டார் ராதிகா. பெண்களைக் கிண்டல் செய்வதையும் 'கிளார்கி கிளார்கி' என்று பேசுவதையும் விடுத்து நகைச்சுவையைத் தொடருங்கள் என்று அறிவிப்பாளர்களுக்கு அறிவுரை கூறினார் சுஹாசினி.
'கபாலி'யை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த ராதிகா ஆப்தே, அழகழகான மாலை நேர உடைகளில் வந்து பெருமூச்சு விட வைத்த ஸ்ரேயா, ப்ரணிதா, ஹன்சிகா, வேதிகா, லஷ்மி ராய், அமிரா தஸ்தூர், மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய விக்ரம், சிவகார்த்திகேயன், அல்லு அர்ஜுன் என்று பலரும் நிகழ்ச்சிக்கு நிறம் சேர்த்தனர். நிகழ்ச்சியைத் தமிழில் தொகுத்து வழங்கிய மிர்ச்சி சிவா, சதீஷ், தன்யா மலையாளத்தில் பேசிய ரஞ்சனி ஹரிதாஸ், ஆகியோர் ஏறக்குறைய ஆறு மணி நேரம் நீடித்த நிகழ்ச்சியைத் துடிப்புடன் வைத்திருந்தனர்.

