பாலியல் தொல்லையில் இருந்து முழுமை யாக மீளும் நாள்தான் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததற்கான அறிகுறி என்கிறார் இளம் நாயகி டாப்சி. தனது அண்மைய பேட்டி ஒன்றில் பெண்களுக்கு சுதந்திரமும் பாதுகாப்பும் அளிக்கவேண்டியது சமுதாயத்தின் கடமை என்றும் கூறியுள்ளார். "நள்ளிரவில் ஒரு பெண் எப்போது தனியாக சாலையில் நடந்து செல்ல முடிகி றதோ அப்போதுதான் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று மகாத்மா காந்தி கூறி இருக்கிறார். ஆனால் இன்றுள்ள நிலைமை அப்படியா இருக்கிறது? "டெல்லியில் இளம்பெண் நிர்பயாவை ஒரு கும்பல் நாசம் செய்த சம்பவத்தை எப்படி மறக்கமுடியும்? எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. பெண்கள் பலவிதமாக மானபங்கம் செய்யப்படுகிறார்கள்.
"இதுபோன்ற சம்பவங்கள் இல்லாத இந்தியாவைப் பார்க்க ஆசைப்படுகிறேன் என்று இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கூறி இருக்கிறார். அதே ஆசை எனக்கும் இருக்கிறது. பாலியல் கொடுமைகளில் இருந்து பெண்கள் மீளும் நாள்தான் அவர்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்த நாளாக இருக்கும். பெண்களுக்கு எதிரான அனைத்துவித பாலியல் கொடுமைகளும் தடுக்கப்பட வேண்டும். "நான் அமிதாப்பச்சனுடன் 'பிங்க்' இந்தி படத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படும் இளம்பெண் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். அதில் நடித்தபோது இந்த சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் எப்படி கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்று உணர முடிந்தது.
"படப்பிடிப்பில் என்னைக் கட்டுப்படுத்த இயலாமல் அழுதுவிட்டேன். படக்குழுவினர் என்னிடம் இது கதைதான் என்று சொல்லி ஆறுதல் படுத்தினார்கள். "நம் பெண்கள் மதிக்கப்பட வேண்டும், அவர்களைப் போற்றவேண்டும். 'பிங்க்' படம் பார்ப்பவர்கள் பாலியல் சித்ரவதையை அனுபவித்த ஒரு பெண்ணின் துக்கத்தை உணர்வார்கள். பாலியல் குற்றங்களைக் குறைப்பதற்கான தூண்டுகோலாக இப்படம் இருக்கும்," என்கிறார் டாப்சி.

