ஜீவா, நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்த திருநாள் படம் வெளியாகி ஒரு வாரத்துக்குமேல் ஆகிற நிலையில் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஜீவா அடியாள் வேடத்திலும் நயன்தாரா துருதுரு பெண்ணாக வும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர். ஜீவா படத்திற்காகக் கடுமையாக உழைத்தது திரையில் தெரிகிறது. இந்நிலையில் படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப் ஸ்டூடியோ திரையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜீவா, "திருநாள் என் திரையுலக வாழ்வில் முக்கியமான படம். இயக்குநர் ராம்நாத் என்னிடம் திருநாள் படத்தின் கதை சொன்னபோதே இது உங்களுக்காகவே தைத்த சட்டை போன்று இருக்கும் என்றார். கதையின் முதல் பாதியைக் கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது," என்றார்.
திருநாள் படத்திற்காகக் கடுமையாக உழைத்ததாகக் கூறிய ஜீவா, நயன்தாராவின் நடிப் பையும் வெகுவாகப் புகழ்ந்தார். "நானும், நயன்தாராவும் 'ஈ' படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தோம். அதன் பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் சேர்ந்து நடித்துள்ளோம். எங்கள் ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. "நானும், நயன்தாராவும் பொருத்தமான ஜோடி, ரசிகர்களுக்குப் பிடித்தமான ஜோடி என்கிறார்கள்," என்று கூறினார். தன் குடும்பத்தாருக்குத் திருநாள் படம் பிடித்திருந்ததாகக் கூறிய ஜீவா, நயன்தாராவுடன் நடிப்பது அனைவருக்கும் பிடிக்கிறது என்றார். நயன்தாராவின் தொழில் பக்தியே அவரை இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பதாகவும் ஜீவா குறிப்பிட்டார்.

