எந்த நடிகருக்கும் தான் கதை சொல்லவில்லை என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார். 'கபாலி' படத்தை இயக்கிய பா.ரஞ்சித்துக்கு அடுத்தடுத்து மிகப்பெரிய நடிகர்களின் படங்களை இயக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அடுத்ததாக பா.ரஞ்சித் சூர்யாவுக்கு கதை சொல்லியதாகவும் அந்தப் படத்தில் சூர்யா குத்துச்சண்டை வீரராக நடிப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இதற்கிடையில், விஜய் தனக்கும் ஒரு கதை தயார்செய்ய ரஞ்சித்திடம் கூறியதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்தச் செய்திகளுக்கு எல்லாம் பா.ரஞ்சித் தரப்பிலிருந்து மறுப்பு எழுந்துள்ளது. அவர் தற்போது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் இருப்பதாகவும் கதை முழுவதும் தயாரானவுடன் தன்னுடைய அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்கள் கூறியுள்ளனர். மேலும் அவர் இதுவரை எந்த நடிகருக்கும் கதை சொல்லவில்லை என்றும், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் வரை பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்று ரஞ்சித் தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

