திருட்டு விசிடி பிரச்சினையைச் சமாளிக்கும் வகையில் ரெமோ படக் குழு எடுத்துள்ள முடிவு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள 'ரெமோ' படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதியன்று வெளியாக இருக்கிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட், இசையமைப் பாளர் அனிருத் என மிகப்பெரிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற் றுள்ளனர். அதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், இப்படத்தில் சிவகார்த்தி கேயன் பெண் வேடத்தில் நடித்திருப்பது இந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கி உள்ளது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் திருட்டு விசிடி வெளியாகவிடக்கூடாது என்ப தில் இப்படக் குழுவினர் தீவிரமாக இருக்கின்றனர். அதன் முதற்கட்டமாக வரும் அக்டோபர் 7ஆம் தேதி 'ரெமோ' தமிழகத்தில் வெளியான பிறகே, இந்தப் படத்தை வெளிநாடுகளில் வெளியிடப்போவதாக அறிவித்துள் ளனர். அதாவது தமிழ்நாட்டில் முதல் காட்சி முடிந்த பிறகுதான் பிற நாடு களில் வெளியிடப் போகிறார்களாம்.
பொதுவாக, தமிழ்ச் சினிமாவில் வெளிவரும் படங்கள் தமிழ்நாட்டில் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாகவே வெளிநாடுகளில் வெளியாகி விடும். இதனால், வெளிநாடுகளில் இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் திருட்டுத்தனமாக படத்தை வீடியோ எடுத்து, அதை இணையத்தளங்களில் பரப்பிவிடுகின்றனர்.
இதன் காரணமாக, தமிழகத்தில் படம் வெளிவருவதற்கு முன்பே, அதைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் பரவி விடுகின்றன. இதனால் படத்தின் வசூல் எதிர் பார்த்தபடி அமைவதில்லை.

