சமுத்திரகனி தயாரிக்கும் 'கிட்ணா' படத்தில் நாயகியாக நடிக்க தன்ஷிகா காத்திருக்கிறார். இந்தப் படத்தை சமுத்திரகனி சென்ற வருடமே எடுப்பதற்கு தன்ஷிகாவிடம் ஒப்பந்தம் செய்திருந்தார். அந்த நேரத்தில் 'கபாலி' படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு தன்ஷிகாவிற்குக் கிடைத்ததால் "முதலில் 'கபாலி'யை முடித்துவிட்டு வாருங்கள். அது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பு யாருக்கும் எளிதில் கிடைக்காது. அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் என் படத்தைத் தொடங்கலாம்," என்று பெருந்தன்மையுடன் கூறி இருந்தார் இயக்குநர் சமுத்திரகனி.
தன்ஷிகாவும் மகிழ்ச்சியுடன் 'கபாலி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் படத்தில் அவரின் நீண்ட முடியை வெட்டி நவநாகரிகப் பெண்ணாகத் தோற்ற மளிக்கவேண்டும் என்றதும் சிறிதும் யோசிக்காமல் அவர் தன்னுடைய நீண்ட முடியைக் 'கபாலி'க்காகத் தியாகம் செய்தார். தற்பொழுது 'கிட்ணா' படத்தின் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பதற்காக தன்ஷிகா முடி வளர்க்க ஆரம்பித்து இருக்கிறார். போதுமான அளவு முடி வளர்ந்ததும் படப்பிடிப்பைப் தொடங்கலாம் என்று சமுத்திரகனி காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 'காத்தாடி', 'காலக்கூத்து' படங்களில் நடிக்க தன்ஷிகா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

