இங்கிலாந்து விளம்பர நாயகியான ஏமி, 'மதராசப்பட்டினம்' படத்தில் நடித்ததால் தமிழ் கதாநாயகியாக பிரபலமடைந்தார். தொடர்ந்து ' ஐ', 'தங்கமகன்', 'கெத்து', 'தெறி' என பல தமிழ்ப் படங்களில் நடித்த ஏமி ஜாக்சன், தற்போது '2.0', 'தேவி' ஆகிய இரு தமிழ்ப் படங்களிலும் ஒரு இந்திப் படத்திலும் நடித்து வருகிறார். கவர்ச்சியாக நடிக்க துணிந்தபோதும் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் வராதது அவருக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இதையடுத்து அவர் சில காலத்துக்கு தனது சொந்த நாடான இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
மேலும் இதுவரை இந்திய சினிமாவில் ஈட்டிய வருமானத்தை நல்லமுறையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார் ஏமி. எனவே, லண்டனில் உள்ள நண்பருடன் சேர்ந்து அழகுச் சாதனப் பொருட்கள் விற்பனை கூடத்தைத் தொடங்கி உள்ளார். இதுபற்றி ஏமி கூறும்போது, "பிரதான அழகுச் சாதனப் பொருட்கள் விற்பனை கூடத்துடன் உயர்தர சலூன் நிறுவுகிறேன். நடிப்புக்குப் பிறகு எனது மற்றொரு லட்சியம் இதன் மூலம் நிறைவேறும்," என்றார்.

