'ஆண்டவ பெருமாள்' சிவா, தெலுங்கு நடிகை பவிஸ்ரீ, '16 வயதினிலே' சத்யஜித் ஆகியோ ருடன் கௌரவ வேடத்தில் மனோஜ் கே.பாரதி நடித்திருக்கும் படம் 'வளையல்'. கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் குருசேகரா. "திரைத் துறையில் மிக நீண்ட போராட் டத்தை நடத்தி இயக்குநர் ஆகி இருக்கிறேன்," என்கிறார் இவர். "பெரிய இயக்குநர்களிடம் உதவியாளராகச் சேர்வது என்பது இன்று மிகவும் சுலபமாகிவிட்டது. இயக்குநர்களைச் சமூக வலைத் தளங்கள் வழி கூட தொடர்பு கொண்டு இன்று இளைஞர்கள் சுலபமாக சினிமாவுக்கு வந்து விடுகிறார்கள். அனுபவம் ஏதும் இல்லாதவர்கள்கூட நேரடியாக படம் இயக்குகிறார்கள்.
"ஆனால், நானெல்லாம் வந்த போது சினிமா, இரும்புக்கோட்டை யாக இருந்தது. ஏதேனும் ஒரு கதவு திறக்காதா என்று ஏங்கிக் கொண்டு, கிடைத்த சந்துகளிலெல் லாம் ஆட்டோ ஓட்டினோம். "இயக்குநர் பாரதிராஜாவிடம் கார் ஓட்டுநராகச் சேர்ந்து, அவரது மனம் கவர்ந்து அதன் பிறகே அவரிடம் சினிமாவில் பணிபுரிய முடிந்தது. 'விலை' படம் இயக்கிய ஜி.காமராஜ், 'அம்முவாகிய நான்' பத்மாமகன் போன்றோரிடம் பணி புரிந்து, அதன் பிறகே இயக்கு நராகக் களமிறங்கியிருக்கிறேன்," என்கிறார் குருசேகரா.
படத் தலைப்பு பழையதாக இருக்கிறதே? "இருக்கட்டுமே... ஆனால் 'வளையல்' என்று சொன்னதுமே ஒரு மாதிரி நல்ல படம் என்ற எண்ணம் வருகிறது அல்லவா? அதுதான் இந்தக் கதைக்குத் தேவை. எனது படத்துக்கு ரொம்ப பொருத்தமான தலைப்பு இதுதான். "ஓர் அனாதை இளைஞனுக்கும் வாய் பேசமுடியாத பெண்ணுக்கும் இடையே இயல்பாக மலரும் காதலை விவரிக்கும் கதை இது. அப்பெண்ணால் பேச முடியாது என்பது படம் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். நாயகனுக்கு கடைசியில்தான் தெரியும். இந்த சவால்தான் திரைக்கதையின் சிறப்பம்சம். கடைசியில் உண்மை தெரிய வரும்போது நாயகன் என்ன முடிவெடுக்கிறான் என்பது தான் பரபர உச்சக்கட்ட காட்சி," என்கிறார் குருசேகரா.
'வளையல்' படத்தின் ஒரு காட்சியில் சிவா, பவிஸ்ரீ

