விக்ரம் 2 வேடங்களில் நடித்து அண்மையில் திரைக்கு வந்த 'இருமுகன்' படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர் தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்பதே தன் குறிக்கோள் என்றார். படம் பற்றி மேலும் பேசிய அவர், "இருமுகன் படம் வசூல் சாதனையுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றி எனக்கு மட்டுமல்ல. படக்குழுவினர் அனைவரையும் சேரும். "ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் நான் நீண்ட இடைவெளி எடுத்துக் கொள்கிறேன் என்று சிலர் ஆதங்கப்படுகிறார்கள். "எனக்குப் பட எண்ணிக்கை முக்கியமல்ல. தரமான படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள்.
"ஒரு நடிகருக்கு முகவரி கொடுப்பது, அவர் நடிக்கும் கதாபாத்திரங்களும் அவர் நடித்துத் திரைக்கு வந்த கடைசி படமும்தான். இருமுகன் எனக்கு அப்படி ஒரு படமாக அமைந்து இருக்கிறது," என்று விக்ரம் பேசினார். விழாவில் இயக்குநர் ஆனந்த் ஷங்கர், பட அதிபர் சிபு தமீன்ஸ், உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார் கள். இதற்கிடையே, விக்ரமின் மகன் துருவாவும் அவரைப் போலவே சினிமா மீது ரசனை கொண்டவராக இருக்கிறார். லண்டனில் 6 மாதமாக சினிமா பற்றிப் படித்துவந்த இவர் முதன்முதலாக ஒரு குறும்படத்திற்கு கதை எழுதி, இயக்கி உள்ளார். அந்தக் குறும்படத்தை அதிகாரபூர்வமாகத் தன்னுடைய யூடியூப்பில் வெளியிட்டுள்ளார் துருவ். 'குட்நைட் சார்லி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் குறும்படம் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

