கிசுகிசுக்கள் வழக்கமான ஒன்றுதான் - கீர்த்தி சுரே‌ஷ்

கிசுகிசுக்கள் வழக்கமான ஒன்றுதான் - கீர்த்தி சுரே‌ஷ்

2 mins read
cd5c790f-464b-4883-b630-54819e49d834
-

வளரும் நடிகைகள் கிசுகிசுக்களில் சிக்கிக் கொள்வது சகஜமான விஷயம்தான் என்கிறார் இளம் நாயகி கீர்த்தி சுரேஷ். தமிழ்ப்பட உலகில் முக்கிய இடத்தைப் பிடித்து இருக்கிறார் அம்மணி. அவரைப் பற்றி எழும் கிசுக்கிசுக்கள் குறித்து ரசிகர்கள் பரபரப்பாக விவாதித்து வருகிறார்கள். இந்நிலையில், கிசுகிசுக்களில் சிக்கிவிடக் கூடாது என்பதில் முடிந்தவரை தாம் மிகக் கவனமாக இருப்பதாகக் கூறுகிறார் கீர்த்தி. "குறிப்பாக என்னுடன் நடிக்கும் அனைவரிடமும் உண்மையான நட்பு வளர்க்கிறேன். சகஜமாகப் பேசிப் பழகி வருகிறேன். அதனால் அவர்களும் என்னிடம் நல்லவிதமாக நட்பு பாராட்டுகிறார்கள்.

"அனைவரிடமும் ஒரே மாதிரி பழகுவதால் என்னைப்பற்றி தவறான செய்திகள் வருவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நான் யாரிடமும் வெட்டியாக அரட்டை அடிப்பதில்லை. என் வேலையில் தான் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறேன். "மறுநாள் நடிக்க வேண்டிய காட்சிகளை முதல் நாளே கேட்டறிந்து ஒத்திகை பார்த்துவிட்டு, அதன் பிறகே படப்பிடிப்புக்கு வருகிறேன். அங்கு எனக்கு நடிப்பைத் தவிர வேறு சிந்தனை எதுவும் கிடையாது. நடிப்பைப் பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பேன்.

"இது படப்பிடிப்பு தளத்துக்கு வரும் அனைவருக்கும் தெரியும். எனவே என்னைப் பற்றி அதிக கிசுகிசுக்கள் வருவதில்லை. இனியும் வராமல் பார்த்துக் கொள்வேன்," என்கிறார் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த 'ரெமோ' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்த மாகியுள்ளார். சூர்யா, மகேஷ் பாபு ஆகியோர் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.