இந்தியாவின் தமிழ்த் திரைப்படத் துறையான 'கோலிவுட்'டில் நுழைந்துள்ள சிங்கப்பூர் இசை யமைப்பாளர் ஷபிர், திறமையுடைய சிங்கப்பூர் கலைஞர்கள் அனைத்துலக ரீதியில் செல்வது குறித்துத் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். தமிழ்த் திரைப்படம் ஒன்றுக்கு இசையமைத்துள்ளது மூலம் உள்ளூர் பிரபலம் ஷபிர், இப்போது தமிழ்த் திரைப்படத் துறைக்குள் கால் பதித்துள்ளார். பாடகரும், பாடலாசிரியருமான இவர், விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படமான 'சகா'வில் ஏழு பாடல்களை இயற்றி அவற்றுக்கு இசையமைத் தும் இருக்கிறார். அவற்றுள் நான்குப் பாடல்களுக்கு இவர் குரல் கொடுத்துள்ளார்.
புதுமுக இயக்குநர் முருகேஷின் இயக்கத்தில் இவ்வாண்டு இறுதியில் 'சகா' வெளிவர இருக்கிறது. 2005ஆம் ஆண்டு வசந்தம் ஸ்டார்' பாட்டுப் போட்டியின் வெற்றியாளரான ஷபிர், இவ்வாண்டு நடுப்பகுதியில் தமிழ்த் திரைப்படத் துறையில் பணிபுரிய குடும்பத்துடன் சென்னைக்குத் தற்காலிகமாக புலம்பெயர்ந்தார். எனினும், "சென்னையில் நான் குடியேறுகிறேன் என்பதை விட எனது பணியை அங்கு விரிவுபடுத்துகிறேன் என்று கூறுவது பொருத்தமானது. எனது வேர் சிங்கப்பூரில்தான் திடமாக உள்ளது," எனக் கூறுகிறார் 31 வயது ஷபிர். இதுவரை மூன்று பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ள இவர், பல்வேறு வசந்தம் நாடகங் களிலும் நடித்து, பாடல் எழுதி இசை அமைத்துள்ளார்.
மகள்கள் அலிஷா, அமீரா, மனைவி நிஷானா பர்வீன் ஆகியோருடன் ஷபிர். படம்: ஷபிர்

