நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு பட உலகில் 12 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். 'அருந்ததி'யில் மந்திரவாதியைப் பந்தாடிய ஆக்ரோஷமும், 'பாகுபலி', 'ருத்ரமாதேவி' படங்களில் ராணியாக வந்து வாள் வீசியதும் 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் 20 கிலோ எடை கூடி குண்டுப் பெண்ணாக வந்ததும் இவரது நடிப்புத் திறமையைப் பறைசாற்றுவதாக அமைந்தன. 'வேட்டைக்காரன்', 'சிங்கம்', 'வானம்', 'தெய்வத் திருமகள்', 'லிங்கா', 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட பல படங்கள் அனுஷ்கா நடிப்பில் வந்து ரசிகர்களைக் கவர்ந்தன. இவருக்குத் தற்போது 36 வயது ஆவதால் பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. 'பாகுபலி' இரண்டாம் பாகம், 'ஓம் நமோ வெங்கடேசாய', 'சிங்கம் 3', 'பாக்மதி' ஆகிய 4 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன.
இவற்றில் பெரும்பாலான படங்களில் அவர் நடித்து முடித்துவிட்டார். 'சிங்கம் 3' படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. தொடர்ந்து மற்ற படங்களும் வெளியாக இருக்கின்றன. வேறு புதிய படங்கள் எதிலும் அனுஷ்கா ஒப்பந்தமாகவில்லை. வயது முதிர்ச்சியால் இளம் கதாநாயகர்கள் ஜோடி சேரத் தயங்குவதும் புதிய கதாநாயகிகளின் வரவு அதிகரித்து இருப்பதும் அனுஷ்காவிற்குச் சரிவை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் அனுஷ்காவுக்கு விரைவில் திருமணத்தை முடித்துவிடக் குடும்பத்தினர் ஆர்வம் காட்டுகிறார்கள். மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமாக நடப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் அனுஷ்கா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா வாய்ப்பு இல்லாததால் ஓட்டல் தொழிலில் ஈடுபட அனுஷ்கா திட்டமிட்டு இருக்கிறார். சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஹைதராபாத்திலும் சென்னையிலும் ஓட்டல்கள் திறக்க முடிவு செய்து இருக்கிறார்.

