நம்பிக்கை நாயகனின் அடுத்த வெற்றி

நம்பிக்கை நாயகனின் அடுத்த வெற்றி

2 mins read
e3bd8ba0-118b-441d-a6fa-90613f2cd33b
-

தற்பொழுது கோலிவுட்டில் வெற்றி நாயகன் என்றால் அது விஜய் சேதுபதிதான். இவருடைய படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. இவருடைய நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான 'புரியாத புதிர்' படமும் வெற்றிக்கனியைச் சுவைத்திருக்கிறது. விஜய் சேதுபதி நடிக்கும் படம் நிச்சயம் நஷ்டத்தை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையில் திரையரங்க உரிமையாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்குகின்றனர். மூன்று வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட 'புரியாத புதிர்' படம் எப்படி இருக்குமோ என்ற சந்தேகத்தில் படத்தைப் பார்க்கச் சென்றவர்களை விஜய் சேதுபதி ஏமாற்றவில்லை. இந்தப் படத்திலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் மக்கள் நாயகன். தற்பொழுது 'விவேகம்' படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்குகளில் பாதிக்குமேல் 'புரியாத புதிர்' படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்தில் விஜய் சேதுபதி ஒரு நகரத்து இளைஞராக கலக்கியிருக்கிறார். அவரின் நடிப்பு, சூழ்நிலையால் குணம் மாறும் விதம் என்று மாறுபட்ட வேடங்களில் அசத்தி யிருக்கிறார். அவரின் உடல் அசைவுகள் நடிப்பிற்கு உணர்வுகள் கொடுக்கின்றன. கதை தேர்ந்தெடுத்த விதம், அதற்கு ஏற்ப மாறிய விதம், காதல் என்று நிறைய பாராட்டுகளைப் பெறுகிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியின் படங்களில் நகைச்சுவை இருக்கும். ஆனால் இப்படத்தில் நண்பனாக அர்ஜுனன் வந்தாலும் பெரிதளவில் நகைச்சுவை எதுவும் இல்லை.

படத்தில் நாயகன் நாயகியிடையே வரும் மென்மையான காதல் காட்சிகள் மனதை வருட வைக்கின்றன. மீரா என்ற பெயர் காயத்திரிக்குப் பொருந்தியதோடு விஜய் சேதுபதியுடன் காதல் காட்சிகளில் நல்ல புரிந்துணர்வோடு இணைந்து நடித்திருக் கிறார். அவர்கள் தோன்றும் பாடல் காட்சிகளும் இனிமையாக இருக்கின்றன. இயக்குநர் கதையைக்கொண்டு சென்ற விதம் அருமையாக இருக்கிறது. படம் முழுவதும் படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கிறது கதையும் இசையும். வேறொருவரின் தற்கொலைக்கு நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம். தற்கொலை பிரச்சினைகளுக்குத் தீர்வல்ல. பார்க்கும் பார்வைகூடத் தற்கொலைக்குத் தூண்டும் எனச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். நல்ல பதிவுகளை மட்டும் மற்றவர்கள் காயப்படாத வகையில் தொழில்நுட்பம் கொண்டு பகிருங்கள். கருத்துச் சுதந்திரம் உண்டுதான். ஆனால் அதற்காக எதை வேண்டுமானாலும் பகிரக்கூடாது. தீய விஷயங்களைப் பதிவேற்றம் செய்யும்போது உலகின் மற்றொரு மூலையில் ஒரு பிஞ்சு மனது அதே தீய விஷயத்தினைப் பதிவிறக்கம் செய்து கொண்டு இருக்கிறது என்பதனை உணருங்கள். அது உங்கள் குழந்தையாகவும் இருக்கலாம். அதற்கு நீங்களே காரணம் ஆகிவிடாதீர்கள் என்பதை உணர்த்துகிறது இந்தப் படம். மொத்தத்தில் 'புரியாத புதிர்' கதைக்குச் சரியான பெயர். அத்தனை பொருத்தம்.

'புரியாத புதிர்' படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் காயத்ரியும் தோன்றும் ஒரு காட்சி.