நான் சூப்பர் ஸ்டார் இல்லை என்கிறார் நயன்தாரா

நான் சூப்பர் ஸ்டார் இல்லை என்கிறார் நயன்தாரா

2 mins read
583e26f8-7702-47f9-bf46-b904f92769a7
-

ஆறு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் 'சூப்பர் ஸ்டார்' என்று அழைப்பதில் தவறில்லையே என்று திரையுலக விவரப்புள்ளிகள் நியாயம் கற்பிக்க, நயன்தாராவோ 'அப்படி எல்லாம் குறிப்பிடாதீர்கள்' எனப் பதறுகிறார். வேறொன்றுமில்லை... நயன்தாரா தற்போது நடித்து வரும் இரு புதுப் படங்களின் தயாரிப்புத் தரப்பு படத்தின் தலைப்பில் அவரது பெயருடன் 'பெண் சூப்பர் ஸ்டார்' என்று பட்டம் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று கூறினராம். இதைக் கேட்டுத் தான் அம்மணி பதறிப் போயிருக்கிறார். இத்தகைய பட்டங்களில் எல்லாம் தனக்கு எந்தவித ஆர்வமும் இல்லை என்று உடனுக்குடன் தெரிவித்துவிட்டாராம். போகட்டும், தமிழில் நயன் தாரா கடைசியாக நடித்த இரு படங்களின் வசூல் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

இதனால் அவரது சந்தை மதிப்பு சற்றே சரிந்திருக்கிறது. இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்பினாராம். ஆனால் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களைச் சுட்டிக்காட்டி நயனுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் சிவா. இந்நிலையில் இருவரும் சேர்ந்து நடித்துள்ள 'வேலைக்காரன்' படம் எதிர்வரும் ஆயுத பூசை பண்டிகையின்போது வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் தொழில்நுட்பப் பணிகள் இன்னும் முடிந்த பாடில்லை. எனவே பட வெளியீடு தள்ளிப் போகலாம் எனக் கூறப்படுகிறு. இதை அறிந்த நயன்தாரா, உடனே சிவகார்த்திகேயனைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். வேறொன்றுமில்லை... நயன் நடித்துள்ள 'அறம்' திரைப்படம் வெளியீடு காணத் தயாராக உள்ளது. 'வேலைக்காரன்' ஒதுங்கிக்கொள்ளும் பட்சத்தில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் நயன்தாரா. இதற்கிடையே ஜெய் நடித்துள்ள 'பலூன்', சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' ஆகிய படங்களும் ஆயுத பூசையின்போது வெளியீடு காண உள்ளன. மேலும் கவுதம் கார்த்திக்கின் 'ஹரஹர மகாதேவகி'யும் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது.