ரத்தம் தெறிக்கும் அடிதடி சண்டைக் காட்சிகள், முகம் சுளிக்க வைக்கும் நகைச்சுவை இல்லாமல் ஒரு படம் உருவாகியுள்ளது. அது மட்டுமல்ல, ஒரு நல்ல காதல் கதையையும் இப்படம் சொல்கிறது. 'பிச்சுவா கத்தி' ரசிகர்களுக்கு நல்லதொரு படத்தை பார்த்த அனுபவத்தை நிச்சயம் தரும் என்கிறார் ஐயப்பன். இவர் சுந்தர்.சியிடம் 'நகரம்', 'கலகலப்பு' ஆகிய படங்களிலும், இயக்குநர் பத்ரியிடம் 'தம்பிக்கு இந்த ஊர்' படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். படத்தின் கதைக்களம் என்ன?" "நகரத்தில் இருக்கும் ஒரு காதல் ஜோடியும், கிராமத்தில் இருக்கும் ஒரு காதல் ஜோடியும் தீவிரமாக காதலிக்கிறார்கள். காதலர்களுக்கு பிரச்சினை வரும் போது ஒரு ஜோடி நல்ல வழியைத் தேடுகிறது. இன்னொரு ஜோடி தப் பான வழியைத் தேடுகிறது. இதிலிருந்து கதை சுவாரசியமான போக்கில் நகரும். அதற்கேற்ப திரைக்கதை அமைத்துள்ளேன்," என்கிறார் ஐயப்பன்.
கிராமத்தில் இருக்கும் இனிகோ பிரபாகர், ஸ்ரீப்ரியங்கா ஜோடியும் நகரத்தில் இருக்கும் செங்குட்டுவன், அனிஷா ஜோடியும் எப்படி இணைகிறார்கள் என்பது சுவாரசியமாக இருக் குமாம். நகைச்சுவை கலந்த காதல் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் இரண்டு நாயகர்கள், நாயகிகள் உள்ளனரே... பிரச்சினை ஏதும் உருவாக வில்லையா?
"இனிகோ பிரபாகரைப் பொறுத்தவரை ஈகோ இல்லாத கலைஞர். படிப்பு முடிந்து வேலை தேடும் கிராமத்து இளைஞன் வேடத்துக்குப் பொருத்தமாக இருந்தார். அதுமட்டுமில்ல, இது நாயகர்களுக்கான படம் கிடையாது. கதைக்குத் தான் நடிகர், நடிகைகள் தேவைப்பட்டார்கள். "செங்குட்டுவனுக்கு இதுதான் முதல் படம். விற்பனைப் பிரதிநிதி வேடம். பொதுவாக சில கதைகளில் இயக்குநர்கள் சொல்லிக் கொடுப்பதை அப்படியே செய்ய வேண்டும். சில கதைகளில் கலைஞர்களும் தங்கள் சொந்த சரக்கை கொடுத்தால்தான் அந்தப் படைப்பு சிறந்து விளங்கும். அந்த வகையில் இரண்டு நாயகர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்குள் புகுந்து என்ன வித்தியாசம் பண்ணலாம் என்று யோசித்து மிகச் சிறந்த பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். "அதேபோல் தான் கதாநாயகிகள் ஸ்ரீபிரியங்காவும் அனிஷாவும். நல்ல புரிதலுடன் வேலை பார்த்தார்கள். இரண்டு பேரிடமும் முழுக் கதையையும் கொடுத்து படிக்கச் சொன்னதால் படப்பிடிப்பை சுமுகமாக நடத்த முடிந்தது.

