தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் ஆகிய இரண்டும் தமது இரு கண்களைப் போன்றது என்கிறார் விஷால். 'துப்பறிவாளன்' படத்துக்கு விமர்சன, வசூல் ரீதியில் கிடைத்துள்ள வரவேற்பு மனிதரை மிகுந்த உற்சாகப்பட வைத்துள்ளது. இரு சங்கங்களின் வெற்றிக்காக ஓய்வு குறித்து யோசிக்காமல் உழைத்து வருவதாகச் சொல்கிறார்.
"தயாரிப்பாளர் சங்கம் தற்போது துணிந்து பல முடிவுகளை எடுத்து வருவது உண்மை. எத்தனை நாள்தான் வேடிக்கை பார்ப்பது? ஏதோ ஓரிடத்தில் சின்ன அளவில் முறைகேடு என்றால் பொறுத்துப் போகலாம். எல்லோரும் சேர்ந்து தயாரிப்பாளர்களை ஏமாற்றுவதாக இருந்தால் எப்படி பார்த்துக்கொண்டிருப்பது?
"தயாரிப்பாளர் சங்கத்தை சுத்தப்படுத்தவே நான்கு மாதங்களாகி விட்டன. இனிமேல்தான் வளர்ச்சி காண தொடங்குவோம்," என சூடாகப் பேசுகிறார் விஷால். தயாரிப்பாளர் மிகவும் கஷ்டப்பட்டு படம் தயாரித் தால் அதை பலபேர் கூறுபோட்டு சம்பாதிப்பதாகச் சாடுபவர், ஒரு திரைப்படம் வெளிவந்த உடனே இணையத்தில் அதை முறைகேடாக வெளியிட்டு பலரும் சம்பாதிப்பதாகப் புகார் எழுப்புகிறார்.

