மலையாளத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான படம் 'பிரேமம்'. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதற்குக் காரணம் அந்தப் படத்தில் நடித்திருந்த மூன்று நடிகைகள்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த மூன்று நடிகைகளையும் தமிழில் நடிக்க வைக்க தமிழ்த் திரையுலகம் முயன்று பார்த்து தோற்றது. ஆனால் அந்த மூன்று நடிகைகளில் இருவரை ஏற்கெனவே தன்னுடைய படங்களில் நடிக்க வைத்துவிட்டார் நடிகர் தனுஷ். மூவரில் ஒருவருக்கு இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் கதை சரியில்லை என்று கூறி நடிக்க மறுத்து வெளியேறினார். அப்படிப்பட்டவரையும் தன்னுடைய வார்த்தை ஜாலத்தால் மயக்கி தமிழ்த் திரையுலகத்திற்கு கொண்டு வந்துவிட்டார் நடிகர் தனுஷ். அவர்கள் வேறு யாரும் இல்லை.
சாய் பல்லவி, அனுபவா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகிய இந்த மூன்று நடிகைகள்தான். இதில் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் தனுஷின் 'கொடி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதேபோல மற்றொரு நாயகியான மடோனா செபாஸ்டியன், தனுஷ் தயாரித்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் தனுஷ் இயக்கத்தில் உருவான 'பவர் பாண்டி' படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். இப்போது சாய் பல்லவியும் தனுஷுடன் 'மாரி-2' படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

