வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மனிதர் இதிலும் சோடை போகவில்லை. பல மொழிகளில் குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க பலரும் அணுகி வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி', செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை', அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்', ஏ.ஆர்.முருகதாஸின் 'ஸ்பைடர்', அஸ்வின் சரவணனின் 'இறவாக்காலம்' உள்ளிட்ட படங்களின் மூலமாக மீண்டும் திரையுலகில் தனது அடுத்த சுற்றைத் தொடங்கி உள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
இதையடுத்து தென்னிந்தியாவின் மிகப் பரபரப்பான நடிகராக உருவெடுத்துள்ளார். ஏன் திடீரென நடிப்பில் கவனம் செலுத்துகிறீர்கள்? என்று கேட்டால், நடிப்பு தான் தனக்கு மிகவும் பிடித்தமானது எனப் பதில் வருகிறது. "நான் ஊரில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்ததே நடிப்பதற்குத்தான். இங்கே சினிமா என்கிற இரும்புக்கோட்டைக்கு எந்தப் பக்கம் கதவு என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டு இருந்தேன். மூன்று ஆண்டுகள் உணவகம் ஒன்றில் சர்வராக வேலை பார்த்துக்கொண்டே, கோடம்பாக்கத்தில் வாய்ப்புக்காக அலைந்தேன்," என்று கடந்த கால அனுபவங்களை அசை போடுகிறார் சூர்யா.

