'திருட்டுப்பயலே' தமிழ்த் திரை ரசிகர்களால் மறக்க இயலாத ஒரு படம். பல ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதையும் சுசி கணேசன் தான் இயக்குகிறார். பாபி சிம்ஹா, அமலா பால் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். "இது ஒரு போலிஸ் கதை. 'வால்டர் வெற்றிவேல்', 'சாமி', 'சிங்கம்' எனப் பல படங்கள் வந்துவிட்டன. இது என் பார்வையில் ஒரு போலிஸ் கதை," என்கிறார் சுசி கணேசன். படத்தில் எந்தவிதமான நீதி போதனையும் கிடையாதாம். சுசியால் சினிமாவுக்கு அறிமுகமான பிரசன்னாவுக்கும் படத்தில் குறிப்பிடத்தக்க வேடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுசி கணேசனும் துப்பறிவாளராக வருவாராம்.
"பாபி சிம்ஹாவுக்கு இது முக்கியமான படம். மிக பிரபலமான நடிகர் இந்தப் படத்தை ஏற்கமாட்டார். சில குற்ற விஷயங்கள் உள்ளன. எனவே ரசிகர்கள் மத்தியில் உள்ள தங்கள் மதிப்பு குறித்து பயப்படுவார்கள். "பாபி இந்தப் படத்துக்குள் புகுந்தபிறகு, இப்போது பார்த்தால் பிரமிப்பாக உள்ளது. கதாபாத்திரத்தில் நுழைந்தபிறகு அசத்திவிடுகிறார். அவரிடம் உண்மையும் அர்ப்பணிப்பும் இருக்கிறது. "பாபிக்கும் முன்னதாக அவரது முன்னோடிகள் செய்த காவல்துறை கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டுள்ளன. அவருக்கும் இது தெரியும். இந்த உண்மையை அவர் புரிந்துகொண்டதால் இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் புதிதாக தோற்றம் அளிக்கும்." அமலாபால் குறித்து? "அவரது கதாபாத்திரத்துக்கு ஏற்ப பிரமாதமாக இருக்கிறார். படம் தொடங்கிய போது அமலாவுக்கு சில தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தன. அவரது கதாபாத்திரத்தின் பெயர் அகல் விளக்கு. அசல் மூக்குத்தி குத்தி, சேலை கட்டி வந்து நின்றபோது, அவர் உண்மையாகவே என் மனதில் இருந்த அகல்தான். அவரையே பின்னணியும் பேசவைத்தேன்.

