திருட்டு விசிடி, புதுப் படங்களை இணையத்தில் வெளியிடுவது உள் ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாநகராட்சியின் கேளிக்கை வரியானது தங்களை நிலைகுலைய வைத்திருப் பதாகத் தயாரிப்பாளர்கள் தரப்பு தெரிவிக்கின்றது. இதையடுத்து கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற தயாரிப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, திரையரங்குக் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும், தமிழ்ப் படங்களுக்கு கேளிக்கை வரி ரத்து செய்யப்பட வேண்டும் என அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (6ஆம் தேதி) முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் விஷாலுக்கு திரை யுலகத்தினர் இது தொடர்பில் ஆதரவு தெரி வித்துள்ளனர். திருட்டு விசிடி உள்ளிட்ட பல விவகாரங்களில் அவர் கடுமையான முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வருவது திரையுலகத்துக்கு நன்மை பயக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். தயாரிப்பாளர்கள் சங்கம் தனது நிலைப் பாட்டில் உறுதியாக நிற்கும் என விஷாலும் கூறியுள்ளார். இதற்கிடையே இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீபாவளி திரைப் படங்களைத் திரையிடப்போவ தில்லை என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.