முத்தக் காட்சியால் சர்ச்சை; பெண் இயக்குநரின் பதிலடி

முத்தக் காட்சியால் சர்ச்சை; பெண் இயக்குநரின் பதிலடி

1 mins read
4827e7c0-7713-465d-890a-010f73847ddf
-

'அபியும் அனுவும்' படத்தில் இடம்பெற்றுள்ள முத்தக் காட்சி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கியுள்ள படம். ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையைப் பெற்றவர் இவர். பழம்பெரும் இயக்குநர் பி.ஆர்.பந்துலுவின் மகளுமான விஜயலட்சுமி இயக்குநராகவும் பின்னர் உருவெடுத்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள படம் 'அபியும் அனுவும்'. இதில் பியா நாயகியாகவும் மலையாள நடிகர் டோவினோ நாயகனாகவும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், படத்தில் இடம்பெறும் உதட்டோடு உதடு பொருந்தும் முத்தக் காட்சி தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்கள் இது குறித்து பரபரப்பாகப் பேசி வருகிறார்கள். "பெண் இயக்குநர் ஒருவர் இயக்கும் படத்திலேயே இதுபோன்ற காட்சிகள் இடம்பெறலாமா?" எனச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். "என் படத்தின் கதைக்குத் தேவைப்பட்டதால் அக்காட்சியை எடுத்தேன். விமர்சிப்பவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சிக்கட்டும்," என்று சூடாக பதிலடி கொடுத்திருக்கிறார் விஜயலட்சுமி.