சத்தமில்லாமல் முன்னணி நாயகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். 'தானா சேர்ந்த கூட்டம்', 'சாமி-2', 'நடிகையர் திலகம்' என இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன. வரும் 17ஆம் தேதி கீர்த்தியின் பிறந்தநாள். இதை அறிந்த ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் முன்கூட்டியே அவருக்குத் தங்கள் வாழ்த்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதனால் நெகிழ்ந்து போயிருக்கிறார் கீர்த்தி. இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில், கவர்ச்சியாக நடிப்பதில் தனக்கு அறவே ஆர்வம் இல்லை என்று கூறியுள்ளார் கீர்த்தி. "இப்போது மட்டுமல்ல, அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து கேட்டாலும் என் பதில் மாறாது. எப்போதுமே கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டேன். இதில் உறுதியாக இருக்கிறேன்," என்கிறார்.
சாவித்திரி வேடத்தில் நடிப்பது குறித்து? "காலஞ்சென்ற நடிகையர் திலகம் சாவித்திரியைப்போல நடிப்பது உண்மையில் கடினம்தான். அவரைப்போல நடித்திருக்கிறேனா என்பதை நான் சொல்லக்கூடாது. ரசிகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். "இந்தப் படத்துக்காகவே அவருடைய படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்தேன். ஒரு காட்சியில்கூட கண், உதடு என எதுவுமே சும்மா இருக்கவில்லை. ஏதாவது வித்தியாசமாகச் செய்திருக்கிறார்," என்று பழம்பெரும் நடிகையைப் புகழ்ந்து தள்ளுகிறார் கீர்த்தி. 'பார்த்தாலே பைரவி' என்ற படத்தில் சாவித்திரி ஆடியுள்ள சிறு நடனத்தை 'நடிகையர் திலகம்' படத்துக்காக கீர்த்தியும் ஆடியுள்ளாராம். இதற்காக சாவித்திரியின் நடனத்தை பலமுறை பார்த்து பயிற்சி எடுத்தாராம்.

