சென்னை: நடிகர் விஷாலும் அரசியலில் குதிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஆங்கிலப் புத்தாண்டு தொடக்கத்தில் அவர் புதுக் கட்சியை துவங்க திட்டமிட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவை யடுத்து தமிழக அரசியல் களத்தில் பல்வேறு அதிரடித் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுக மூன்றாகப் பிளவுபட்டது. பின்னர் சிலர் மேற்கொண்ட சமரச முயற்சி கள் காரணமாக முதல்வர் எடப் பாடி, ஓபிஎஸ் அணிகள் இணைந் தன. எனினும் சசிகலா, தினகரன் தரப்பு தனியாக இயங்கி வருகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் அரசியல் களம் காணப்போவதாக வும், அவர் பாஜகவில் இணைவார் என்றும் கூறப்பட்டது.
ஜெயலலிதா வின் மறைவையடுத்து தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்ப வாய்ப்புள்ளதாக அரசியல் விமர் சகர்கள் கருதினர். ரஜினி தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் ரசிகர்களையும் அடுத்தடுத்து சந்தித்துப் பேசினார். ஆனால், தனது அரசியல் பிரவேசத்தை அவர் இதுவரை உறுதி செய்யவில்லை. இந்நிலையில், அரசியலே வேண்டாம் என ஒதுங்கியிருந்த நடிகர் கமல்ஹாசன் திடீரென தமிழக அரசை விமர்சிக்கத் துவங்கினார். பின்னர் அரசியல் களம் காணப்போவதாக மறை முகமாகத் தெரிவித்தார். வரும் நவம்பர் 7ஆம் தேதி அவர் புதுக்கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

