தென்னிந்திய திரையுலகம் குறித்து அவதூறாகப் பேசுவதை அறவே ஏற்க இயலாது என நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். அவ்வாறு பேசுவது முட்டாள்தனமானது என்றும் அவர் காட்டத்துடன் தெரிவித்துள்ளார். ஹன்சிகா இந்தளவு கோபப்படக் காரணம் வேறு யாருமல்ல. இந்தி நடிகை ஹினா தான் அம்மணியின் கோபத்தைக் கிளறி விட்டுள்ளார். விஷயம் இது தான். சல்மான்கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் 11ஆவது பகுதி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதன் போட்டியாளர்களில் ஒருவரான ஹினா, சக போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, தென்னிந்திய சினிமா குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தார். தென்னிந்திய இயக்குநர்கள் தங்கள் படங்களின் கதாநாயகிகள் சற்றே பருமனாக இருக்க வேண்டும் என விரும்புவதாக ஹினா குறிப்பிட்டார். இது தனக்கு அறவே பிடிக்காத ஒன்று என்றும் கூறினார்.
தென்னிந்திய படங்களில் நடிக்கக் கேட்டு இருமுறை தன்னை சிலர் அணுகியதாகவும், ஆனால், உடல் எடையை அதிகரிக்க வேண்டும் எனக் கூறிய காரணத்தால் அவ்வாய்ப்புகளைத் தாம் ஏற்கவில்லை என்றும் ஹினா தெரிவித்தார். இந்தக் கருத்து தான் ஹன்சிகாவைக் கோபப்பட வைத்துள்ளது. இதையடுத்து ஹினாவுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
"என்னதான் சொல்ல வருகிறார் ஹினா? எப்படி தென்னிந்திய சினிமாவை இப்படி அவதூறாகப் பேசலாம்? அவர் சொல்வது முட்டாள்தன மானது. ஏன், பல பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய சினிமாவில் வேலை செய்வதும், செய்து கொண்டிருப்பதும் அவருக்குத் தெரியாதா?
"இப்படி எங்களைத் தரம் தாழ்த்தி பேசியது உங்களுக்குத் தான் அவமானம் ஹினா," என்று ஹன்சிகா தெரிவித் துள்ளார். இவரை அடுத்து ஹினாவுக்கு நடிகை குஷ்புவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எப்படி கண்ணியத்துடன் நடந்து கொள்வது என தென்னகத் திலிருந்து பாலிவுட் கலை ஞர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறி உள்ளார். "அதனால்தான் அவர்கள் அதே நிலையிலும், நம் பெண்கள் அவர்களைத் தாண்டியும் வளர்ச்சி அடைந்து வருகிறார்கள்," என்றும் குஷ்பு மேலும் குறிப்பிட்டுள்ளார். ஹினாவின் கருத்துக்குத் திரை யுலகைச் சேர்ந்த மேலும் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

