'ஹரஹர மகாதேவகி' படத்தில் இடம்பெற்ற வசனங்களால் தனக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குறைந்துவிட்டதாகக் கருதுகிறாராம் இளம் நாயகி நிக்கி கல்ராணி. கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்த அப்படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. எனினும் கவுதம் கார்த்திக் அடுத்து நடிக்கும் 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து' படத்திலும் ஒப்பந்தமானார் நிக்கி. இதிலும் 'ஏ' வசனங்கள் நிறைய உள்ளனவாம். இந்நிலையில் கவர்ச்சி நாயகியாக நடிக்கக் கேட்டு பலரும் அணுகவே, நிக்கி எரிச்சலாகிவிட்டாராம்.
அந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்து விட்டார். இப்போது 'கலகலப்பு 2' படத்தில் கவனம் செலுத்துகிறாராம். "இது அனைவரையும் சிரிக்க வைக்கும் படம். இதன் மூலம் 'ஏ' பட நடிகை என்ற எனது தோற்றம் மாறும். "கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. அதேசமயம் யாரும் முகம் சுளிக்காத வகையில் நான் ஏற்கும் கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். "அந்தத் திட்டத்தைத்தான் இனி செயல்படுத்தப் போகிறேன். அதன் பிறகு அனைவருக்கும் என்னைப் பிடித்துப் போகும்," என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் நிக்கி கல்ராணி.

