'திறமை இருந்தால் வெற்றி பெறலாம்'

'திறமை இருந்தால் வெற்றி பெறலாம்'

2 mins read
d5675f6c-a9c6-4d95-a3b2-8b68b577439d
-

தமிழ்த் திரையுலகில் குறைந்த காலத்தில் முன்னணி நடிகர்களுடன் அதிகப் படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் அண்மையில் அளித்த பேட்டியில் பெரிய போராட்டத் திற்குப் பின்னர்தான் இந்த இடத்தைப் பிடித்ததாக மனம் திறந்து கூறினார். திரையில் இப்போது உங்களுக்குக் கிடைத்துள்ள இடத்தைப் பெறுவதற்கு எத்தனை ஆண்டுகள் போராடினீர்கள்? "ஆறு ஆண்டுகளுக்கு மேலாக போராடித்தான் இந்த இடத்தைப் பிடித்திருக்கிறேன். ரசிகர்களின் மனதில் எனக்கும் ஓர் இடம் கிடைத்துள்ளதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. 'காக்கா முட்டை' படத்திற்குப் பிறகுதான் என் மீது அனைவருக்கும் நம்பிக்கை வந்தது. அதற்குமுன் சிறிய வேடங்களில்தான் நடித்தேன்". காக்கா முட்டையில் அம்மா ரோலில் நடித்தது பற்றிச் சொல்லுங்கள். "அந்தப் படத்தை பொறுத்தவரை அம்மாவா, அக்காவா என்றெல்லாம் நான் பார்க்கவில்லை. குடிசைப் பகுதியில் வசிக்கும் பெண்ணாக உணர்வுபூர்வமாக நடித்ததை அனைவரும் பாராட்டினர்". முறைப்படி நடனமாட கற்றுக் கொண்டீர்களா?

"முறைப்படி யாரிடமும் நான் நடனம் கற்கவில்லை. ஒரு தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று பரிசு பெற்றேன். அதில் கிடைத்த ஊக்கம் காரணமாகவே திரைகளில் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்." தமிழ், மலையாளம், இந்தி என மூன்று மொழிகளிலும் நடிக்கிறீர்களா? "இதைக் கண்டிப்பாக நான் எதிர் பார்க்கவில்லை. மலையாளத்தில் சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் 'ஜோமோன்டே சுவிசேஷங்கள்', 'சகாவ்' ஆகிய படங்களில் நடித்தது எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு. மலையாளப் படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன. அதேபோல் இந்தியில் 'டாடி' படத்திலும் எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்து இருக்கிறது." கவர்ச்சியான வேடங்களில் நடிக்கும் எண்ணம் உண்டா?

"எனக்கு எது வசதியாக இருக்கிறதோ அதைத்தான் செய்வேன். என்னிடமிருந்து ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கின்றனரோ அதை மட்டுமே செய்வேன்." மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பு பற்றி கூறுங்கள். "பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க அழைப்பு வரும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. இதுபோன்ற படங்களில் நடிக்கும்போது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதற்கு ஏற்ற வகையில் நடிக்கவேண்டும்." முதல்முறையாக தனுஷ் ஜோடியாக நடிப்பது பற்றி? "வட சென்னை'யில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறேன். அந்தப் பகுதியில் வாழும் பெண்ணைப் போலவே நடிக்கவேண்டும். முடிந்தவரை சிறப்பாக நடித்துள்ளேன். வசனங்கள் பேசும்போது தனுஷ் உதவி செய்தார். இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவும் நடிக்கிறார்."